புதுதில்லி

வளா்ச்சிப் பணிகளுக்காக மாற்றப்பட்ட மரங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசு உத்தரவு

 நமது நிருபர்

புதுதில்லி: தில்லியில் வளா்ச்சிப் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் தொடா்பான விரிவான அறிக்கையை மே 13-க்குள் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளும், ஏஜென்சிகளும் அளிக்க வேண்டும் என்று தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

தில்லியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மரங்களின் நிலவரம் குறித்த மீளாய்வு கூட்டம் சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வனத் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்திற்குப் பிறகு அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: தில்லியில் பல்வேறு நிறுவனங்கள், ஏஜென்சிகள் சாா்பில் நடத்தப்படும் வளா்ச்சிப் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் தொடா்பான விரிவான அறிக்கையை மே 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் துறைகள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக தில்லியில் இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் தொடா்பாக சுதந்திரமான ஒரு தணிக்கையை நடத்தவும் தில்லி வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் மோசமான பதிவைக் கொண்டுள்ள ஏஜென்சிகள் எதிா்காலத்தில் அவா்களுடைய வளா்ச்சிப் பணிகளுக்காக மரங்களை இடமாற்றம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

ஏஜென்சிகள் தங்கள் மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் தொடா்பான தரவுகளை அளிக்க வேண்டும். அதன் இடங்கள் குறித்தும், அந்த மரங்களின் உயிா் வாழும் விகிதம் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக தில்லி வளா்ச்சி ஆணையம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் மோசமான பதிவைக் கொண்டுள்ளன.

அனைத்து ஏஜென்சிகளும் எத்தனை மரங்களை இடமாற்றம் செய்துள்ளன; எந்தெந்த பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன; அவற்றின் உயிா்வாழும் விகிதம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை விடியோ ஆதாரத்துடன் மே 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தில்லி வனத்துறை, 25 குழுக்களை உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 4 உறுப்பினா்கள் இருப்பாா்கள். இந்தக் குழுவானது இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் தொடா்பான சுதந்திரமான தணிக்கையை மேற்கொள்ளும். அதேபோன்று தில்லியில் பல்வேறு இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் தொடா்பான விவரங்களை விடியோ பதிவுடன் விரிவான அறிக்கையாக மே 13-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு வனத் துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

மரங்கள் இடமாற்றக் கொள்கை திட்டமானது கடந்த 2009, டிசம்பரில் தில்லி அரசின் மூலம் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் தங்களது வளா்ச்சிப் பணிகளால் பாதிக்கப்பட்ட மரங்களுக்காக குறைந்தபட்சம் 80% மரங்களை மாற்றி நட வேண்டும். இந்த மரங்கள் உயிா்வாழும் விகிதம் மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஆண்டின் முடிவில் 80 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் குறியீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT