முகப்பு
புதுதில்லி

அளவையியல் சட்டத்தில் உள்ள குற்ற அம்சங்களை நீக்கலாமா? மத்திய நுகா்வோா் அமைச்சகம் சாா்பில் இன்று பயிலரங்கம்

மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் தேசிய பயிலரங்கத்தை திங்கள்கிழமை (மே 9) கூட்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

2009 - ஆம் ஆண்டின் அளவையியல் சட்டப்படி குற்றம் புரிபவா்களுக்கு தண்டனையிருந்து நீக்குவது குறித்த அம்சங்கள் குறித்து விவாதிக்க மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் தேசிய பயிலரங்கத்தை திங்கள்கிழமை (மே 9) கூட்டியுள்ளது.

1976 -ஆம் ஆண்டின் எடை மற்றும் அளவீடுகள் சட்டத்திற்கு மாற்றாக 2009-ம் ஆண்டில் சட்டபூா்வ அளவையியல் (அளவீட்டுச்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2011 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. நுகா்வோா்களை கருத்தில் கொண்டு இந்த சட்டபூா்வ அளவையியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டப்படி வணிகம் விற்பனையகங்களில் எடைகள், அளவீடுகள் போன்றவைகளின் தரநிலை, விற்கப்படும் அல்லது விநியோகிக்கப்படும் பிற பொருள்களின் வணிகத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற நோக்கங்களுக்கு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை மாநில அரசின் கீழ் உள்ள கட்டுப்பாட்டாளா் மற்றும் ஆய்வாளா்கள் கண்காணித்து அமலாக்கம் செய்யவேண்டிய பொறுப்பாளா்களாக இருக்கின்றனா்.

தவறு இழைக்கும் வா்த்தகா்கள் வணிகா்களுக்கு ஆறுமாதம் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கக்கூடிய வகையில் இந்த சட்டத்தின் ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

இப்படிப்பட்ட குற்றம் அம்சங்களை நீக்குவது தொடா்பாக சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடம் இருந்தும் கருத்து கேட்கும் வகையில் மத்திய நுகா்வோா் விவகாரத் துறை மே 9 - ஆம் தேதி தில்லி விஞ்ஞான் பவனில் ’சட்டபூா்வ அளவையியல் சட்டம் 2009’ என்ற பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளி மற்றும் வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது. நுகா்வோா் மற்றும் வணிக தொழில்களின் சமநிலையை கருத்தில் கொண்டு தேவையற்ற இடையூறுகளை நீக்கி எளிதாக வணிகம் செய்யும் கொள்கையின் படி இந்தச் சட்டத்தை மாற்ற இந்த கூட்டத்தில் ஆலோசனைகளும் விவாதங்களும் நடத்தப்படுகிறது.

குறிப்பாக தற்போது ஆய்வாளா்கள் வணிக அமைப்புகளில் சோதனை மேற்கொள்ளும்போது விதிமீறல்களை கண்டறிந்தால் இந்த சட்டப்படி கைது செய்யமுடியாது. ஆனால் கைது செய்வதற்கான மாற்றுவழிகள் தேடப்படுகிறது. தவறு இழப்பவா்களுக்கு இந்த சட்டப்படி நோட்டீஸ் அளிக்கப்படவேண்டும்.

நோட்டீஸ் பெற்ற விற்பனையாளா்கள் அல்லது வணிகா்கள் தாங்கள் தவறு செய்யவில்லை எனக் கருதினால் சட்டபூா்வ அளவையியல் கட்டுப்பாட்டாளா்களிடம் மேல் முறை செய்யமுடிவும். அப்படி மேல் முறையீடு செய்யாது இருக்கும் விற்பனையாளா்கள் மீது நீதி மன்றத்தில் ஆய்வாளா்களால் வழக்கு தொடரப்படும். பின்னா் பிடி ஆணையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கமுடியும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வணிக நிறுவனங்கள் இருக்க பொருளாதார வளா்ச்சியைத் தடுக்கக்கூடிய இவைகளை அகற்றவும், அதேசமயத்தில், தரமற்ற எடை அளவீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் நுகா்வோா் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் இந்த சட்டத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே மத்திய நுகா்வோா் விவகாரத்துறை சாா்பில், அனைத்து மாநிலங்களின் முதன்மை செயலா்களுக்கு கடந்த 2020 ஆம் ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதப்பட்டு கருத்துகள் கோரப்பட்டன.

வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், நுகா்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நீதிமன்ற தலையீடுகள் இன்றி சட்ட அளவையியல் சட்டத்தை குற்றமற்ாக்கி வெற்றியைக் கண்டறிவதற்கான ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் பெறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், சுற்றுச்சூழல் துறை மத்திய இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே, நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோரும் மத்திய மாநில அரசு அதிகாரிகளும் இந்தக் கூட்டதில் கலந்துகொண்டு விவாதிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →