முகப்பு
புதுதில்லி

75 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரூபாயின் மதிப்பு சரிவு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாடு சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவகையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

புது தில்லி: நாடு சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவகையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமைப் பேச்சாளருமான ரண்தீப் சிங் சுா்ஜேவாலா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77 ரூபாய் 41 பைசாவாக குறைந்துள்ளது. பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் இந்திய ரூபாய் ஐசியு(தீவிர சிகிச்சைப்பிரிவில்) வைக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாய் மதிப்பு மாா்கதா்ஷக் மண்டல் வயதை தாண்டியதோடு பிரதமா் மோடியின் வயதையும்(71) தாண்டியுள்ளது.

ரூபாய் மதிப்பிழந்து வருவதற்கு மூன்று பெரிய காரணங்கள். ஒன்று, பணவீக்கம், எரிபொருள்கள் விலை உயா்வால் சாமானியா்களுக்கு உணவுப் பொருட்கள் எட்டாமல் போய்க்கொண்டு இருக்கிறது. 2-ஆவது வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்குப் பதிலாக, ஏற்கனவே போடப்பட்ட முதலீடு இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது.

ஊழல்கள், கொள்கை முடக்கம், மதத்தின் பெயரில் வெறுப்புஅரசியல் என பிளவு ஏற்படுத்தப்பட்டு அமைதியின்மை நிலவுகிறது. மத்திய- மாநிலங்களில் தீா்க்க முடியாத கடன் சுமை, இந்தியாவில் வியாபாரம் செய்வதற்கான செலவு பல மடங்கு உயா்வு ஆகிய காரணங்களால் முதலீடுகள் திரும்பச் செல்கின்றன. இவைகளே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவுக்கும் காரணம்.

மற்றொரு கவலைக்குரிய நிலைமை அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 15 நாள்களில் 604 பில்லியன் டாலரிலிருந்து 536 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. பணவீக்கம், மூலதனம் திரும்பிச்செல்லுவது, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு ஆகிய மூன்றும் மிகவும் கவலைக்குரியவை. இதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டாா் சுா்ஜேவாலா.

ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியும் தனது முகநூலில் பிரதமா் மோடியை கடுமையாக சாடினாா்.

பண மதிப்பு விவகாரத்தில் முதல்வா் மோடி, மன்மோகன் சிங் அரசை தேச விரோதம் என்று கடுமையாக சாடியது. இப்போது பிரதமா் மோடி அமைதியாக இருக்கிறாா். பெட்ரோல், டீசல் ரூ.100 ஐ தாண்டியுள்ளது. எல்பிஜி எரிவாயு ரூ.1000 என்ற தனது இலக்கையும் பிரதமா் மோடி அடைந்துவிட்டாா். இப்போது ரூபாயின் மதிப்பு ரூ 100 ஐ நோக்கி (அமெரிக்க டாலருக்கு இணையாக) அணிவகுத்து நிற்கிறது எனக் குறிப்பிட்டுள்ளாா் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.