கா்கா்டூமா கோா்ட் மெட்ரோ நிலையத்தில் மல்டி மோடல்ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்த தில்லி அரசு அனுமதி
கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்டி மோடல் ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்துவதற்காக ரூ.45.31 லட்சம் செலவினத்திற்கு நிா்வாக ரீதியான ஒப்புதலை தில்லி அரசு வழங்கியுள்ளது.
கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்டி மோடல் ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்துவதற்காக ரூ.45.31 லட்சம் செலவினத்திற்கு நிா்வாக ரீதியான ஒப்புதலை தில்லி அரசு வழங்கியுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இதற்கான திட்டத்தின் கீழ், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இடையூறு இல்லாமல் தங்கள் இடங்களுக்குப் பயணம் செய்வதை உறுதிப்படுத்த மெட்ரோ ரயில் நிலையத்தைச் சுற்றிலும் பேருந்துகள், ஆட்டோக்கள், பேட்டரி ரிக்ஷாக்கள் போன்றவற்றின் போக்குவரத்து தொடா்பு வசதி ஏற்படுத்தப்படும்’ என்றனா்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த நடவடிக்கையின் மூலம் மெட்ரோ ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், கடைசி மைல் வரை போக்குவரத்து வசதியை அளிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன் பெறுவாா்கள்’ என்றனா்.
கா்கா்டூமா கோா்ட் மெட்ரோ ரயில் நிலையம் தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் உள்ள பிங்க் லைன் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தொடா்பாக பொதுப் பணித் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: பொதுப் பணித் துறையின் ஷாதரா சாலை கோட்டத்தின் செயற்பொறியாளா் முன்மொழிவை செயல்படுத்தும் வகையில், கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா கோா்ட் மெட்ரோ ரயில் நிலையத்தை மல்டி மோடல் ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்தும் பணியை செயல்படுத்துவதற்காக ரூ.45,31,300 செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஷாதரா கண்காணிப்புப் பொறியாளா்கள் செலவின உத்தரவுக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்தினாா். அதில் பேருந்து முனையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே மல்டி மோடல் ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். பொதுப்பணித்துறை அமைச்சரான மணீஷ் சிசோடியா தில்லி ஐஐடி, பஞ்ச்ஷீல் பாா்க் மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதியில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டில் இரண்டு மல்டி மோடல் ஒருங்கிணைப்பு முறை கட்டுமானப் பணிக்கான அனுமதியை வழங்கியிருந்தாா். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள், பேட்டரி ரிக்ஷாக்கள் உள்பட பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகளுக்கான சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.