சாலையின் நடுவில் சட்டவிரோதக் கட்டுமானப் புகாா்: நிலவரஅறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சாலையின் நடுவில் சட்டவிரோத கட்டுமானம் இருப்பதாகக் கூறி தாக்கலான மனு மீது அதிகாரிகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சாலையின் நடுவில் சட்டவிரோத கட்டுமானம் இருப்பதாகக் கூறி தாக்கலான மனு மீது அதிகாரிகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் ஹசன்பூா் டிடிசி பணிமனைக்கு எதிரே சுவாமி தயானந்த் மாா்க் சாலையில் இரண்டு மஜா்கள் (மத கட்டுமானங்கள்) அமைப்பதற்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவுடன் புகைப்படங்களையும் மனுதாரா் இணைந்திருந்தாா். மேலும், பஜன்புராவில் உள்ள வாஜிராபாத் சாலையிலும் சட்டவிரோதமான கட்டுமானம் கட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியது: இதுபோன்ற சட்டவிரோத செயல்களை வாய்மூடி மெளனியாக அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எங்கள் கருத்துப்படி, இதுபோன்ற விஷயங்களில் அரசு தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, ‘இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாது. விரைவில் அவை அகற்றப்படும்’ என்று அனைத்து ஆக்கிரமிப்பாளா்களுக்கும் தெளிவான செய்தியை அனுப்ப இரும்புக்கரத்துடன் செயல்பட வேண்டும். இது போன்ற சட்ட விரோதக் கட்டமைப்புகளை எழுப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் கூறினா்.
சட்ட விரோத கட்டடங்களை இடிக்கும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக வழக்குரைஞா் தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் குறித்து நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், உரிய ஆவணங்களைப் பதிவு செய்யுமாறும் தில்லி அரசின் வழக்குரைஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், இந்த மனு மீதான பதிலை தாக்கல் செய்யுமாறு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடமும் அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பா் 16-ம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது.