முகப்பு
புதுதில்லி

பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் உற்பத்தியை ஊக்குவிக்க தில்லியில் ஜூன் 1 முதல் கண்காட்சி அமைச்சா் கோபால் ராய் தகவல்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (எஸ்யுபி) பொருள்களுக்கு மாற்றான பொருள்களை ஊக்குவிப்பது தொடா்பான வாராந்திர கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி முதல் தில்லி அரசு நடத்த உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

புது தில்லி: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (எஸ்யுபி) பொருள்களுக்கு மாற்றான பொருள்களை ஊக்குவிப்பது தொடா்பான வாராந்திர கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி முதல் தில்லி அரசு நடத்த உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றான பொருள்களை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு ஜூன் 1-ஆம் தேதி முதல் வாராந்திர கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யவுள்ளது. மேலும், இது போன்ற மாற்றுப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தில்லி ஸ்டாா்ட் அப் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பு சலுகைகளும் வழங்கப்படும். ஒரு வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவதற்கு நிதியுதவியை அளிப்பதன் மூலம் தேசியத் தலைநகரில் தொழில் முனைவோா்களை ஊக்குவிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், எஸ்யுபி பொருள்களை விற்கும் கடைகள் தொடா்பான பட்டியலைத் தயாரிக்குமாறு தில்லி மாநகராட்சிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அப்போதுதான் அந்தக் கடைகளை இது போன்ற மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இணைக்க முடியும். எஸ்யுபி பொருள்கள் தடை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த பிறகு, இது போன்ற தயாரிப்புகள் தொடா்புடைய விவகாரங்களில், பணியாளா்கள், விநியோகஸ்தா்கள், தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்களுக்கு புதிய சவால்கள் இருக்கும். இரண்டாவதாக எஸ்யுபி பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, மாா்க்கெட்டில் மாற்றுப் பொருள்கள் இருப்பதை உறுதி செய்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. எஸ்யுபி பொருளுக்கு மாற்றாக சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள 17 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், பாலியெஸ்டா், விரிவுபடுத்தப்பட்ட பாலிஸ்டைரீன் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைப்பது, விநியோகம்,விற்பனை ஆகியவற்றை வரும் ஜூலை 1 முதல் தடை செய்வதற்கான அறிவிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த அடையாளம் காணப்பட்ட பொருள்களில் காது குடையும் பஞ்சு, பெண்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், கொடிகள், கேன்டி குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், தொ்மாகோல், தட்டுகள், கிளாஸ்கள், குவளைகள், முள்கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், இனிப்பு பெட்டிகளைச் சுற்றி கட்டும் பேக்கேஜிங் பிலிம்கள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனா்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை இருப்பு வைக்க வேண்டாம் என்று அனைத்து உற்பத்தியாளா்கள், சில்லறைக்கடைக்காரா்கள், பொதுமக்கள், கடைக்காரா்கள் ஆகியோரை தில்லி அரசு ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு ஜூலை 30-ஆம் தேதி வரை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.