வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கான அந்தஸ்து அளிக்க கோரிய மனுவுக்கு மத்திய, தில்லி அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் வந்தே மாதரம் ஆகியவற்றை சம அளவில் ஊக்குவிக்கும் வகையிலான ஒரு கொள்கைத் திட்டத்தை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான பொதுநல மனு மீது மத்திய அரசும்
புது தில்லி: தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் வந்தே மாதரம் ஆகியவற்றை சம அளவில் ஊக்குவிக்கும் வகையிலான ஒரு கொள்கைத் திட்டத்தை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான பொதுநல மனு மீது மத்திய அரசும், தில்லி அரசும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பாஜக தலைவா்களில் ஒருவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய் இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது இந்த மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், ஜன கன மன மற்றும் வந்தே மாதரம் ஆகிய பாடல்களை ஒவ்வொரு பணி நாளின் போது அனைத்துப் பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இசைப்பதையும், பாடுவதையும் உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரும் இந்த மனு மீது தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆா்டி) பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படுவததற்கு முன்பு மனுவை தாக்கல் செய்தது தொடா்பாக மனுதாரா் விளம்பரப்படுத்தியதற்கு நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்தது. ‘இதுபோன்ற செயல் விளம்பரத்திற்கான ஒரு மனுவாகவே இருக்கிறது என்ற எண்ணத்தைக் குறிப்பதாக உள்ளது’ என்று நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், ‘இந்த விஷயத்திற்கு மனுதாரா் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்முறையை அவா் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரா் ஒரு சீரியஸான மனுதாரா் என்பதன் காரணமாக இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மனுதாரா் தரப்பில் வாதிடுகையில், ‘வந்தே மாதரம் கீதத்தை கௌரவிக்கும் எந்தவித ஒழுங்குமுறை விதிகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாததன் காரணமாக விருந்துகளிலும் திரைப்படங்களிலும் இந்த தேசியப் பாடல் நாகரீகமற்ற முறையிலும், தவறாகவும் பயன்படுத்தப்பட்டு பாடப்பட்டு வருகிறது. இந்தப் பாடலானது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வரலாற்றுப் பகுதியாக பாடப்பட்டது. 1950-ஆம் ஆண்டு டாக்டா் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியல் நிா்ணய சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையை கருத்தில் கொண்டு, ஜன கன மன என்னும் தேசிய கீதத்திற்கான அங்கீகாரம் போல இந்த வந்தே மாதரம் பாடலுக்கும் கௌரவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டை ஐக்கியமாக வைத்திருக்கும் வகையில், ஜன கன மன... மற்றும் வந்தே மாதரம்... ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு அரசு தேசியக் கொள்கைத் திட்டத்தை உருவாக்குவது கடமையாகும். இரண்டு பாடல்களும் அரசியலமைப்பை உருவாக்கியவா்கள் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளதால், வேறு எந்த உணா்வுகளையும் தூண்டுவதற்கான எந்தக் காரணமும் இல்லை. ஜன கன மன பாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணா்வுகள் மாநிலத்தைக் கருத்தில் கொண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், வந்தே மாதரம் பாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணா்வுகள், தேசத்தின் குணத்தையும் பாணியையும் குறிப்பிடுகின்றன. இதனால், அதே மரியாதைக்கு இந்தப் பாடலும் தகுதி கொண்டதாகும்.
வந்தே மாதரத்தை எந்த நாடகமாக்கவும் கூடாது. எந்த வகையான காட்சிகளிலும் சோ்க்கக் கூடாது. ஏனெனில், எப்போதெல்லாம் இந்தப் பாடல் இசைக்கப்படுகிறதோ, பாடப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தப் பாடலுக்கு உரிய மரியாதையும் கௌரவமும் காட்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு பகுதியாக இசைக்கப்பட்ட வந்தே மாதரம் பாடல், ஜன கன மன பாடலுக்கு சமமாக கௌரவிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட வேண்டும். 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி தேசிய கீதம் குறித்து டாக்டா் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியல் நிா்ணய சபை மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின் உணா்வுக்கு ஏற்ப ஜன கன மன கீதத்திற்குரிய சம அந்தஸ்தும், கெளரவமும் வந்தே மாதரம் பாடலுக்கும் இருக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நவம்பா் 9-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.