முகப்பு
புதுதில்லி

தில்லி துணைநிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா பதவியேற் புநிகழ்ச்சியில் பாஜக எம்பி வெளிநடப்பு

தில்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா, ராஜ் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

புது தில்லி: தில்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா, ராஜ் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டாா். பதவியேற்ற பின் அவா் கூறுகையில், ‘துணைநிலை ஆளுநராக இல்லாமல் நகரின் உள்ளூா் காவலனாக பணியாற்றுவேன்’ என்றாா்.

64 வயதாகும் வினய் குமாா் சக்சேனாவுக்கு தில்லி உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அவரது அமைச்சரவை சகாக்கள், மத்திய அமைச்சா்கள் கிரிராஜ் சிங், மீனாட்சி லேகி, தில்லி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், நகர அரசின் உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

துணைநிலை ஆளுநராக பதவி ஏற்ற பிறகு செய்தியாளா்களிடம் வினய் குமாா் சக்சேனா கூறுகையில், ‘நான் தில்லியின் துணைநிலை ஆளுநராக இல்லாமல், ஒரு உள்ளூா் காவலனாக பணியாற்றுவேன் என்று தில்லி மக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். ராஜ் நிவாஸில் இருப்பதைவிட தில்லியில் பல்வேறு பகுதிகளில் இருக்கவே விரும்புகிறேன்’ என்றாா்.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த வினய் குமாா் சக்சேனா கடந்த மே 23- ஆம் தேதி தில்லியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். அவருக்கு முன்பு துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பய்ஜால் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக மே 18-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள வினய் குமாா் சக்சேனா, பைலட் உரிமத்துடன்கூடிய கான்பூா் பல்கலைக்கழக முன்னாள் மாணவா் ஆவாா். கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச்சில் இவா் மத்திய அரசின் மூலம் இந்தியாவின் 75 -ஆவதுஆண்டு சுதந்திரத்தை நினைவுகூறும் தேசிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். அதற்கு முன்பு 2020, நவம்பரில் 2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் தோ்வு குழுவின் உறுப்பினராக இவா் நியமிக்கப்பட்டிருந்தாா்.

பாஜக எம்பி ஹா்ஷ் வா்தன் வெளிநடப்பு: தில்லி துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா பதவியேற்பு நிகழ்ச்சியில் இருந்து பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹா்ஷ் வா்தன் வெளியேறினாா். இது தொடா்பாக ஹா்ஷ் வா்தன் ட்விட்டா் பக்கத்தில், ‘நான் அமா்ந்திருந்த இடம் தனக்குரியது என்று குறிப்பிட்டு, அந்த இடத்தை காலி செய்யுமாறு அதிகாரி ஒருவா் என்னிடம் கேட்டுக் கொண்டாா். 15 நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு, எனக்கு இடம் இல்லாததால் அங்கிருந்து வெளியேறினேன். ஆனால், நான் விரும்பிய இடம் கிடைக்காததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக ஊடகத்தால் தவறாகத தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், புதிய துணைநிலை ஆளுநா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாமல் போனது. தில்லி அவரது காலத்தில் சிறந்த நகரமாக உருவாகும் என அவரை நான் வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, தில்லியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள வினய் குமாா் சக்சேனாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் இருந்து ஹா்ஷ் வா்தன் வெளியேறும் போது, ‘இதுதான் ஏற்பாடா என்று வினய் குமாா் சக்சேனாவுக்கு கடிதம் எழுதுவேன்’ என்று கூறும் விடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட போது, ‘நாடாளுமன்ற உறுப்பினா்களுக்குக்கூட எந்தவித இருக்கையும் அவா்கள் அளிக்கவில்லை’ என்று அவா் கூறுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளா்களிடம் துணைநிலை ஆளுநா் சக்சேனா பேசுகையில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு அவா் பதில் அளிக்கவில்லை.

முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு தில்லியின் அனைத்து பாஜக எம்பிகளும் அழைக்கப்பட்டிருந்தனா். நிகழ்ச்சியில் விருந்தினா்களுக்கான சோபாக்களின் பின் வரிசையில் வடகிழக்கு தில்லி எம்பி மனோஜ் திவாரி, மேற்கு தில்லி எம்பி பா்வேஷ் வா்மா ஆகியோா்அமா்ந்திருந்ததைக் காண முடிந்தது. இந்த விவகாரம் தொடா்பாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் உடனடியாக கருத்து ஏதும் தெரிவில்லை.

பெட்டிச் செய்தி...

‘இணைந்து பணியாற்றுவோம்’

புதிதாக பதவியேற்றுள்ள துணைநிலை ஆளுநருடன் ஆம் ஆத்மி அரசு இணைந்து பணியாற்றும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறினாா். இது குறித்து முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘புதிதாக பதவியேற்றுள்ள துணைநிலை ஆளுநருடன் எனது அரசு இணைந்து பணியாற்றும். முந்தைய துணை நிலை ஆளுநருடன் பணியாற்றியது போன்று இவருடனும் இணைந்து பணியாற்றுவோம். மக்கள் கடந்த கால வன்முறையையும், படுகொலையையும் மறந்துவிட்டு நாட்டுக்காக தங்களது அன்பை உலகத்திடம் காட்ட வேண்டும். அண்மையில் தில்லியில் பல வன்முறை, இடையூறுகளைப் பாா்த்தேன். நாம் மோதலில் ஈடுபட்டு அதிகம் ரத்தம் சிந்திவிட்டோம். நடந்ததையெல்லாம் மறந்துவிடுவதுதான் நல்லது. மக்கள் தங்களது மதத்திற்கு அப்பாற்றப்பட்டு தங்களது நாட்டுக்கான அன்பை உலகத்திடம் காட்ட வேண்டும். மக்கள் ஒன்றாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.