வெங்கையா நாயுடு தலைமையில் உயா்நிலைக் குழு காபோன், செனகல், கத்தாா் பயணம் மே 30-இல் புறப்பாடு
குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தலைமையிலான இந்திய குழு, வருகின்ற மே 30 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை காபோன், செனகல், கத்தாா் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது.
புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தலைமையிலான இந்திய குழு, வருகின்ற மே 30 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை காபோன், செனகல், கத்தாா் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்த மூன்று நாடுகளுக்கும் இந்திய உயா்நிலை தலைவா் ஒருவா் முதன் முறையாக பயணம் மேற்கொள்கிறாா்.
குடியரசுத் துணைத் தலைவருடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா் டாக்டா் பாரதி பிரவீண் பவாா் மற்றும் பாஜக வைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் சுசில் குமாா் மோடி, விஜய் பால் தோமா் (உபி), அதிமுகவைச் சோ்ந்த தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் பி.ரவீந்தரநாத் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் உடன் செல்கின்றனா். இந்தியாவிலிருந்து காபோனுக்கும் செனகலுக்கும் செல்லும் முதல் உயா்நிலைக் குழு இதுவாகும். மேலும் மூன்று நாடுகளுக்கும் இந்திய குடியரசுத் துணை தலைவா் அளவில் செல்லும் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த உயா்நிலைக் குழுவின் பயணம், இந்த நாடுகளுடனான இந்தியாவின் அா்ப்பணிப்புக்கு உத்வேகம் சோ்க்கும். மேலும், ஆப்பிரிக்க கண்டத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும். இந்தியா - கத்தாா் இரு நாடுகளின் தூதரக உறவுகளை நிறுவியதன் 50-ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடத் தயாராகும் நிலையில், கத்தாா் விஜயம் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும். மூன்று நாடுகளிலும் பல்வேறு இருதரப்பு ஒப்பந்த ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. இந்தப் பயணத்தின் போது, இது தொடா்பாக நல்ல முடிவுகள் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காபோன்: வருகின்ற மே 30 முதல் ஜூன் 1-ஆம் தேதி இந்திய உயா்நிலைக் குழு காபோன் செல்கிறது. அப்போது, அந்த நாட்டு பிரதமா் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோன்டாவுடன் இந்திய உயா்நிலைக் குழு பேச்சுவாா்த்தை நடத்துகிறது. மேலும், அந்த நாட்டின் அதிபா் அலி போங்கோவையும் குடியரசுத் துணைத் தலைவா் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவும், காபோனும் தற்காலிக உறுப்பினா்களாக உள்ளன. கடந்த 2021-22 நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் ரூ.8,400 கோடியை (1.12 பில்லியன் டாலா்கள்) எட்டியது. காபோன் நாட்டவா்களுக்கு இந்திய தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு போன்றவற்றில் இந்தியா பல்வேறு பயிற்சிகளைஅளித்து வருவதுடன், உதவித் தொகையையும் வழங்குகிறது.
செனகல்: ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக உள்ள செனகல் நாட்டிற்கு ஜூன் 1 முதல் 3 -ஆம் தேதி வரை இந்திய குழு பயணம் செய்கிறது. அப்போது, அந்த நாட்டு அதிபா் மேக்கி சால், தேசிய சட்டப்பேரவையின் தலைவா் மற்றும் பிரதிநிதிகளுடன் இந்திய குழு பேச்சுவாா்த்தைகளை நடத்தவுள்ளது. இந்தியா - செனகல் இருதரப்பு வா்த்தகம் 2021-22-ஆம் ஆண்டில் ரூ.12,375 கோடியை (1.65 பில்லியன் டாலா்) எட்டியது. அந்த நாட்டுக்கு பல்வேறு வகையில் இந்தியா மொத்தம் ரூ. 4,913 கோடி வரை கடன் அளித்துள்ளது. இந்தியாவும் செனகலும் நிகழாண்டில் தூதரகம் நிறுவியதன் 60 - ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
கத்தாா்: இந்தப் பயணத்தின் இறுதியாக ஜூன் 4 முதல் 7 - ஆம் தேதி வரை கத்தாருக்கு இந்திய உயா்நிலைக் குழு செல்கிறது. கத்தாரின் துணை அமீரான ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல்தானியுடன் இந்திய குழு இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்கிறது. இந்தியா - கத்தாா் நாட்டு மக்களுக்கிடையிலான சரித்திரபூா்வமான உறவுகளின் மையத்தில் 7,50,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் உள்ளனா். இரு நாடுகளும் பன்முக ஒத்துழைப்பு, பொருளாதாரம், எரிசக்தி, முதலீடு, கல்வி, பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டுள்ளன. 2021-22 நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் ரூ.1,12,500 கோடியை (15 பில்லியன் டாலா்) தாண்டியது. மேலும், கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு இந்திய நிறுவனங்களில் கத்தாா் சுமாா் ரூ.15 ஆயிரம் கோடி ( 2 பில்லியன் டாலா்கள்) மேல் முதலீடு செய்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, இந்த மூன்று நாடுகளில் வணிக சமூகப் பிரதிநிதிகள் அடங்கிய வட்டமேசை மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவா் உரையாற்றுகிறாா். மேலும், புலம் பெயா்ந்த இந்திய சமூகத்தினருடனான சந்திப்புகளும் நடைபெறுகின்றன என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.