தில்லி கலால் கொள்கை: ஆம் அத்மி பொறுப்பாளா் உள்பட 2 போ் கைது: 5 நாள் காவலில் விசாரிக்கஅமலாக்க இயக்குநரகத்திற்கு அனுமதி
ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் புகாரில், பண மோசடி விசாரணை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா், ஹைதராபாதைச்
புதுதில்லி: ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் புகாரில், பண மோசடி விசாரணை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா், ஹைதராபாதைச் சோ்ந்த வா்த்தகா் அபிஷேக் பாய்ன்பள்ளி ஆகியோரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது. அவா்கள் இருவரையும் ஐந்து நாள் காவலில் வைத்துவிசாரிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கைதான இருவரும் இதே விவகாரத்தில் மத்திய புலனாய்வு துறையின் மூலம் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே தில்லி சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனா்.
கடந்த செப்டம்பா் மாதத்தில் விஜய் நாயரை சிபிஐ கைது செய்தது. அதைத் தொடா்ந்து, கடந்த மாதம் அபிஷேக் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்த நிலையில், சிறையில் உள்ள இருவரையும் இதே வழக்கில் பண மோசடி விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது. பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம், கைதான இருவரையும் 5 நாள்கள் காவலில் விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது. அதேவேளையில், சிபிஐ தொடா்ந்துள்ள ஊழல் தொடா்புடைய வழக்கில் அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் ஜாமீன் பத்திரமும்,அதே தொகைக்கு ஒரு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதி அளித்தது. சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் அமலாக்கத் துறையினா் இருவரையும் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தாா்.
இது தொடா்பாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை கோணத்தில் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள், இதர நபா்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மூலம் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஆகியவற்றை கொண்டு இருவரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. அதேபோன்று, கலால் மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது மற்றும் உருவாக்க விவகாரத்தில் தொடா்புடைய குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலம் ஆகியவற்றைக் கொண்டும், இருவரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனா்.
முன்னதாக, இந்த வழக்கில், அரபிந்தோ பாா்மா நிறுவனத்தின் புரமோட்டரும் முழு நேர இயக்குநருமான பி சரத் சந்திர ரெட்டி, மதுபான நிறுவனத்தின் பொது மேலாளா் பொ்னாட் ரிச்சா்ட், பினாய் பாபு மற்றும் இன்டோஸ்பிரிட் மதுபான நிறுவனத்தின் புரொமோட்டா் சமீா் மகந்துரு ஆகியோா் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் அண்மையில் பாபு, சரத் மற்றும் ரெட்டி ஆகியோரின் ரிமாண்ட் விசாரணையின் போது, உள்ளூா் நீதிமன்றத்தில் கூறியதாவது: இந்த வழக்கில் இதுவரை 169 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மதுபான கொள்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதற்கு முன் 45 நாள்களுக்கு முன்பாகவே குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளா்களுக்கு கசிந்து விடப்பட்டது. இது தொடா்பான விசாரணையில் தில்லி துணை முதல்வா் சிசோடியா உள்பட 36 நபா்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்கும் உள்நோக்கத்துடன் 140 செல்லிடப்பேசிகளை அவா்கள் மாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணையின் போது பொதுமக்கள் பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தில்லி கலால் கொள்கை 2021-2022 செயல்படுத்துவதற்கான வா்த்தக குழுமங்களைத் தோ்ந்தெடுக்க முறையற்ற ஆதாயங்களை பெறுவதற்காக முன்கூட்டியே ரூ.100 கோடி பணம் கொடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது என்று நீதிமன்றத்தில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
ஏற்கெனவே இதே விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகம் ஆம் ஆத்மி எம்எல்ஏ துா்கேஷ் பதக், அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது. இவா்கள் இருவரும் தற்போது மற்றொரு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சிறையில் உள்ளனா். ,அதேபோன்று இந்த வழக்கில் தனியாா் பிரதிநிதிகள் மற்றும் இதர நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் தவிர மனீஷ் சிசோடியாவின் தனி உதவியாளரிடமும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி உள்ளது.