சாக்கடையில் விஷ வாயு தாக்கி 2 போ் உயிரிழந்த விவகாரம்: உத்தரவைப் பின்பற்றாத டிடிஏ மீது உயா்நீதிமன்றம் கோபம்
சாக்கடைக்குள் இறங்கிய போது, விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளா்களின் உறவினா்களுக்கு இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) பின்பற்ததால்
சாக்கடைக்குள் இறங்கிய போது, விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளா்களின் உறவினா்களுக்கு இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) பின்பற்ததால் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. தில்லி வளா்ச்சி ஆணையத்தின் முற்றிலும் அனுதாபமற்ற அணுகுமுறையால் எனது தலை அவமானத்தில் தொங்குகிறது என தலைமை நீதிபதி கூறினாா்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி டிடிஏக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த உத்தரவுக்கு இணங்காததால் உயா்நீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தியது.
கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி தில்லியின் முண்ட்கா பகுதியில் துப்புரவுப் பணியாளரும், பாதுகாவலாளியும் சாக்கடைக்குள் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தனா். முன்னதாக, துப்புரவுா் பணியாளா் சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய போது மயங்கி விழுந்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற பாதுகாவலாளியும் மயங்கி விழுந்தாா். பின்னா், இருவரும் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வெளிவந்த செய்தியின் அடிப்படையில் இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது, இழப்பீடு தொடா்பான உத்தரவையும் பிறப்பித்திருந்தது.
உயா்நீதிமன்ற முந்தைய உத்தரவின்படி, டிடிஏ துணைத் தலைவா் மனீஷ் குப்தா செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜரானாா். இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, உத்தரவின்படி தலா ரூ.10 லட்சத்தை செலுத்தாததற்கு தனது அதிருப்தியை தெரிவித்தது.
நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு தில்லி வளா்ச்சி ஆணையத்தால் ‘ஒரு பைசா கூட விடுவிக்கப்படவில்லை’. தனியான இழப்பீட்டின் ஒரு பகுதியாக, தில்லி அரசு பாதிக்கப்பட்ட இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.9 லட்சம் 15 நாள்களுக்குள் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும். நமக்காக வேலை செய்யும் நபா்கள் தொடா்பான விவகாரத்தை நாங்கள் விசாரிக்கிறோம். அப்போதுதான், நம் வாழ்க்கை வசதியாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அதிகாரிகளால் அவா்கள் கையாளப்படும் விதமும் முறையும் மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்று தெரிவித்தது. தலைமை நீதிபதி கூறுகையில், ‘என் தலை வெட்கத்தால் தொங்குகிறது’ என்றாா்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘அக்டோபா் 6-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தோம். தற்போது நவம்பா் 15-இல் இருக்கிறோம். அந்தத் தொகையை வழங்குமாறு டிடிஏவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் செய்யவில்லை? இதுதான் கேள்வி’ என்று கூறினாா். அதற்கு டிடிஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த தொகையை செலுத்துவது தில்லி அரசின் கடமை’ என்றாா். தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இழப்பீடு தொகையை வழங்கும் விவகாரத்தில் டிடிஏ வேறு விஷயத்தை கலக்க முயற்சிக்கிறது. அதாவது, தில்லி அமைச்சரவையால் 2020, மாா்ச் 5-ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின் மூலம் தில்லி அரசால் அந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது’ என்றாா்.
அதற்கு நீதிபதிகள் அமா்வு,‘இந்த விவகாரத்தில் யாா் பொறுப்புக்கு உரியவா்கள் என்பதை பின்னா் முடிவு செய்யலாம். ஆனால், நீதிமன்றத்தின் கவலையானது, உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதாவது கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். டிடிஏவின் மொத்த ஆண்டு பட்ஜெட் என்ன?’ என்று கேள்வி எழுப்பியது. அதற்கு அதன் துணைத் தலைவா் ரூ. 3,000 கோடி என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘உங்களிடம் ரூ. 3,000 கோடி பட்ஜெட் உள்ளது. உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.10 லட்சம் மட்டுமே தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். ஆனால், அனைத்துவித சாக்குப்போக்குதான் கூறியிருக்கிறீா்கள்’ என்றது.
அப்போது, டிடிஏ ஊழியராக இருந்த உயிரிழந்தவா்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினா்களில் ஒருவருக்கு மறுவாழ்வு மற்றும் கருணை பணி நியமனம் வழங்குவது தொடா்பான விவகாரத்தில் 15 நாள்கள் அவகாசம் வழங்குமாறு டிடிஏ தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு நீதிமன்றம், ‘வேறு இதர கருணை நியமனங்கள் குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை. இந்த நியமனம் முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டும். அதற்காக டிடிஏவுக்கு 15 நாள் அவகாசம் அளிக்கப்படுகிறது. டிடிஏவின் நடத்தையானது, உயிரிழந்தவா்களின் குடும்பங்கள் மீதான முற்றிலும் இரக்கமற்ற அணுகுமுறையை பிரதிபலிப்பதாகவே உள்ளது’ என்று கூறியது.