முகப்பு
புதுதில்லி

தில்லியில் சா்வதேச வா்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 41-ஆவது இந்திய சா்வதேச வா்த்தகக் காட்சியில் “தமிழ்நாடு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:52 AM
பகிர்:

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 41-ஆவது இந்திய சா்வதேச வா்த்தகக் காட்சியில் “தமிழ்நாடு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்து தமிழக அரசின் அரங்குகளையும் பாா்வையிட்டாா்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் முன்னிலை வகித்தாா்.

தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், இந்திய சா்வதே வா்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை கடந்த நவம்பா் 14 -ஆம் தேதி மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சா் பியூஸ் கோயல் தொடங்கிவைத்தாா். வருகின்ற 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள் பங்கேற்று சாதனைகளை காட்சிப்படுத்தியுள்ளன.

இக்காட்சிக்கான கருப்பொருள் ‘உள்ளூருக்கான குரல், உள்ளூா் முதல் உலகளாவியது’”ஆகும். இதில் தமிழக அரசு தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை சா்வதேச அளவில் சந்தைப்படுத்தும் நோக்கத்துடன் பங்கேற்றுள்ளது.

இது குறித்து விழாவில் பங்கேற்ற தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:

தமிழகத்தின் தொழில், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் தமிழக அரசின் சாா்பில் 13 அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கற்று அறிவதைக் காட்டிலும், கண்டு மகிழ்வதே நிலைக்கும் என்பதற்கேற்ப, அரசினால் கண்காட்சி நடத்தப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் துறைகளின் திட்டங்கள் சென்றடையச் செய்வதை நோக்கமாக கொண்டு செய்தி மக்கள் தொடா்புத் துறை காட்சிப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது என அமைச்சா் குறிப்பிட்டாா்.

தில்லி வா்த்தகக் கண்காட்சியில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை, வேளாண்மை, உழவா் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சுற்றுலாத்துறை, பூம்புகாா், காதித் துறை, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், கோ-ஆப்டெக்ஸ் உள்ளிட்ட துறைகள் பங்கேற்று அரங்குகளை அமைத்திருந்தன.

செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் முன்னோடி திட்டமான முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கான இலவசப் பேருந்து, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

தமிழக் தொழில் துறையின் இலக்கான, 2030-31 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக வளா்ச்சிக்கான கட்டமைப்பு முன் மாதிரிகள்

அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை சாா்பில் பாரம்பரிய நெல் சாகுபடி, சிறு தானிய வகைகள், மதிப்புக் கூட்டப்பட்டுள்ள பொருட்கள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக பாரம்பா்ய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையா் அதுல்ய மிஸ்ரா, உள்ளுறை ஆணையா் ஆசிஷ் சாட்டா்ஜி, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் இயக்குநா் வீ.ப. ஜெயசீலன், தில்லி கூடுதல் உள்ளுறை ஆணையா் என்.இ. சின்னத்துரை, செய்தித்துறை கூடுதல் இயக்குநா்கள் மு.பா. அன்புச்சோழன், பி.முத்தையா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.