முகப்பு
புதுதில்லி

தில்லி அரசின் பட்டாசு தடை உத்தரவுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும், இருப்பு வைக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்து தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கலான மனு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும், இருப்பு வைக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்து தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கலான மனுவை அவசரமாக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கேட்டுக் கொண்டாா். அப்போது நீதிபதிகள் அமா்வு, இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினா். மேலும், ‘இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நாங்கள் இதில் தலையிட மாட்டோம்’ என்று நீதிபதி அமா்வு தெரிவித்தது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறுகையில், ‘இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டு, உயா்நீதிமன்றம் வழக்கை அக்டோபா் 18-ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது’ என்றாா்.

முன்னதாக, தில்லியில் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடைவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக பசுமை பட்டாசு வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இது தொடா்பாக மனுதாரா் தரப்பில், ‘தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு இந்த விவகாரத்தில் பிறப்பித்த முழு தடையானது, உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு முரண்படும் வகையில் உள்ளது. அதாவது, இதுபோன்ற ஒரு முழு தடையை இந்த நீதிமன்ற அமைப்புகள் ஒருபோதும் அளிக்கவில்லை’ என்று வாதிடப்பட்டது.

தில்லியில் மாசு அளவைத் தடுக்கும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்க, இருப்பு வைக்க, பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் தில்லி அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது. காற்று மாசுவை மேலும் அதிகரிக்க இதன் மூலம் விரும்பவில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. பட்டாசுகள் பயன்பாடு மீது முழு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தெளிவுபடுத்தி இருந்தது. மேலும், பேரியம் உப்புகள் அடங்கிய பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →