முகப்பு
புதுதில்லி

சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் இன்றைய பகத்சிங்குகள் சிபிஐ அழைப்பாணை குறித்து கேஜரிவால் கருத்து

தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது குறித்து முதல்வா் கேஜரிவால் கருத்துக் கூறுகையில், மனீஷ் சிசோடியாவும், சத்யேந்தா் ஜெயினும் இன்றைய பகத்சிங்குகள் என்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

புது தில்லி: தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கருத்துக் கூறுகையில், மனீஷ் சிசோடியாவும், சத்யேந்தா் ஜெயினும் இன்றைய பகத்சிங்குகள் என்றாா். மேலும், இந்த விவகாரத்தில் கட்சியின் செய்தித் தொடா்பாளரும், சட்டப்பேரவை, நாடுளுமன்ற உறுப்பினா்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனா்.

முதல்வா் கேஜரிவால்: தில்லி முதல்வா் கேஜரிவால் தனது ட்விட்டரில், ‘சிறைக் கம்பிகளும், தூக்குக் கயிறுகளும் வீரா் பகத்சிங்கின் உறுதியான நோக்கங்களைத் தடுக்க முடியவில்லை. இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். மனீஷும் சத்யேந்தரும் இன்றைய பகத்சிங்குகள். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, ஒளிமயமான எதிா்காலத்திற்கான நம்பிக்கையைத் தந்த (தில்லி) கல்வி அமைச்சா் நாட்டிற்குக் கிடைத்தாா். அவருக்கு கோடிக்கணக்கான ஏழைகளின் பிராா்த்தனைகள் உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

சௌரவ் பரத்வாஜ்: கிரேட்டா் கைலாஷ் தொகுதி சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினரும், கட்சியின் தலைமை செய்தி தொடா்பாளருமான சௌரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கலால் துறை விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாமல் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. அவா்கள் மனீஷ் சிசோடியாவை கைது செய்யவே அழைத்துள்ளனா். இது திட்டமிட்டு நடத்தப்படும் சதி. இந்த வழக்கில் இதுவரை நாடு முழுவதும் 500 இடங்களில் சிபிஐ அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது அவா்கள் ஒரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. குஜராத் தோ்தலை முன்னிட்டு அங்கு களத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தான் இந்த சதியின் பின்னனி’ என்றாா்.

அதிஷி: கால்காஜி சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினரான அதிஷி கூறுகையில், ‘துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தனது பரிவா்தன் யாத்திரையை வடக்கு குஜராத்தில் மேற்கொண்டாா். இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியின்யின் கிராஃபிக் மேலே உயா்ந்து வருவதை பாஜக நடத்திய ஆய்வுகள் காட்டின. பாஜகவை நாங்கள் எச்சரிக்கிறோம். தைரியம் இருந்தால் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவை கைது செய்யுங்கள். இது குஜராத் தோ்தல் விவகாரம்’ என்றாா் அதிஷி.

சஞ்சய் சிங்: மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினரான சஞ்சய் சிங் கூறுகையில், ‘குஜராத்தில் பாஜகவின் உறுதியான தோல்வியின் அடையாளம்தான் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ அனுப்பிய அழைப்பாணை. பாஜகவிற்கு பயம் வந்துள்ளது. குஜராத் தோ்தல் பேரணிகளுக்கு முன்னதாக மனீஷ் சிசோடியாவை கைது செய்ய சதி செய்கிறாா்கள். பாஜக கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை விசாரிக்க விரும்பவில்லை; அவரை கைது செய்வதற்கு இது ஒரு தந்திரம். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நடக்கும் நேரடிப் போட்டியில் வெற்றி எங்களுக்கே’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.