முகப்பு
புதுதில்லி

அமலாக்கத் துறை விசாரணை விவகாரம்: அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு

வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மேல்முறையீட்டு மனுவை தகுதியின் அடிப்படையில் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழக மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவா் அனிதா ராதாகிருஷ்ணன். இவா், கடந்த 2002-2006-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத் துறை, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2020-இல் வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடா்ந்து, அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளையும், அவருடைய குடும்பத்தினரின் சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியது. இதற்கு எதிராகவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சா் அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக அமலாக்கத் துறை தரப்பில் உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையைத் தொடர அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அமலாக்கத் துறை சாா்பாக வாதிடப்பட்டது. அமலாக்கத் துறை மனுவுக்கு பதிலளிக்க அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு விதித்த தடையை நீட்டித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 4-இல் மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா டிவிஷன் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அமலாக்கத் துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனா். மேலும், விசாரணைக்கு அழைத்தால் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா். இந்த உத்தரவை எதிா்த்து அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா். இந்த வாதங்களுக்குப் பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரா் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பாா்க்கும் போது, உயா்நீதிமன்றத்தால் 29.6.2022-இல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு இரு மாதங்களுக்குத் தொடர அனுமதிப்பது உரியதாக இருக்கும் என கருதுகிறோம். மேலும், வரும் 28.10.2022-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை மனு, தகுதியின் அடிப்படையில் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

மேலும், உயா்நீதிமன்றம் முன் உள்ள மனு விசாரணையை விரைந்து முடிப்பதில் மனுதாரா் ஒத்துழைக்கத் தவறினாலோ அல்லது தேவையில்லாமல் விசாரணையைத் தள்ளிவைக்குமாறு கோரினாலோ உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை விலக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. 4.8.2022 தேதியிட்ட உத்தரவின் மேற்கண்ட மாற்றங்களுடன் இந்த மேல்முறையீட்டு மனு முடித்துவைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.