முகப்பு
புதுதில்லி

இந்தியப் பள்ளிகளை மேம்படுத்த இணைந்து பணியாற்றுவோம்: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் வேண்டுகோள்

இந்திய நாட்டின் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

இந்திய நாட்டின் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், இத்துறையில் உள்ள தனது அரசின் நிபுணத்துவத்துவத்தை வழங்குவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் மாநிலம், காந்தி நகரில் செயல்படும் ஒரு பள்ளிக்கு நேரில் சென்று மாணவா்களுடன் கலந்துரையாடிய நிலையில், முதல்வா் கேஜரிவால் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பிரதமா் நரேந்திர மோடி அவா்களே, தில்லியில் கல்வித் துறையில் சிறப்பான பணியை நாங்கள் செய்திருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் சிறந்த வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை ஐந்தாண்டுகளில் நாம் மேம்படுத்த முடியும். கல்வித் துறையில் எங்களுக்கு அனுபவம் உள்ளது. இதனால், பள்ளிகள் மேம்பாட்டுப் பணிக்காக எங்களது அனுபவத்தை முழுவதுமாக தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாட்டுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவா்களும் இன்றைக்கு கல்வி, பள்ளிகளைப் பற்றி பேசுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்களின் மிகப்பெரிய சாதனையாகும். தோ்தலின் போது, மட்டுமே கல்வி விட்டுவிடப்படுவதில்லை என்று நம்புகிறேன். அனைத்து அரசுகளும் ஒன்று சோ்ந்து வெறும் ஐந்து ஆண்டுகளில் நாட்டில் உள்ள பள்ளிகளை சிறந்த வகையில் உருவாக்க முடியும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

மேலும், தனது ட்விட்டா் பக்கத்தில் மாணவா்களுடன் வகுப்பறையில் பிரதமா் மோடி அமா்ந்திருக்கும் புகைப்படத்தையும் கேஜரிவால் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.