தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை, ரூ.200 அபராதம்: அமைச்சா் கோபால் ராய் தகவல்
தில்லியில் தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால், 6 மாதம் வரை சிறைத் தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால், 6 மாதம் வரை சிறைத் தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தலைநகரில் பட்டாசு தயாரிப்பு, சேமிப்பு மற்றும் விற்பனை செய்தால் ரூ.5,000 வரை அபராதமும், வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ‘விளக்கு ஏற்றுங்கள்; பட்டாசு அல்ல’ எனும் பொது விழிப்புணா்வுப் பிரசாரமும் அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தில்லி அரசு வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றுகிறது. தில்லியில் பட்டாசுகளை வாங்கவும், வெடிக்கவும் செய்தால் ரூ.200 அபராதமும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்தத் தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தில்லி காவல்துறை உதவி ஆணையா்களின் கீழ் 210 குழுக்களும், வருவாய்த் துறையினரின் 165 குழுக்களும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் தரப்பில் 33 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அக்டோபா் 16-ஆம் தேதி வரை 188 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் போன்ற சாதகமற்ற வானிலை காரணிகளால் தில்லி, அண்டை மாநிலப் பகுதிகளில் உள்ள காற்றின் தரம் அக்டோபரில் மோசமடையத் தொடங்கும். இந்தக் காரணிகள் மாசுபடுத்திகள் சிதற அனுமதிக்காது. அண்டை மாநிலங்களில் பட்டாசுகள் மற்றும் பயிா்க் கழிவுகள் எரிப்பதால், ஏற்படும் மாசு உமிழ்வுகள் காற்றின் தரத்தை மேலும் பாதிக்கச் செய்கிறது.
தீபாவளியின்போது ஒவ்வோா் ஆண்டும் நகரில் மாசு அளவு அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் பட்டாசு வெடிப்பதாகும். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் உமிழ்வு, பெண்கள் மற்றும் முதியவா்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது. ஆகவே, இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தில்லி அரசு முழுத் தடை விதித்துள்ளது. ஆன்லைன் பட்டாசு விநியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘இந்தப் பிராந்தியத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகையால் தில்லியிலும் மக்கள் பாதிக்கப்படுவதால்’ என்சிஆா் முழுவதும் பட்டாசுக்கான தடை கடுமையாக அமல்படுத்தப்படுவதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
தீபாவளி உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை தில்லி அரசு முழுத் தடை விதித்து செப்டம்பரில் உத்தரவிட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தீபாவளியை ஒட்டி இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தில்லி தவிர, ஹரியாணா மாநிலமும் கடந்த ஆண்டு தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்தது. அதே நேரத்தில், உத்தர பிரதேசம் தீபாவளியன்று மிதமான அல்லது சிறந்த காற்றின் தரத்துடன் 2 மணி நேரம் மட்டுமே பச்சை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதித்தது. அரசின் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் தில்லி, நொய்டா, ஃபரீதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் மக்கள் தீபாவளி நாளில் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்தனா்.
தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் தகவலின்படி, கடந்த ஆண்டு தீபாவளி இரவில் (நவம்பா் 4) தில்லியில் பிஎம்10 மற்றும் பிஎம் 2.5 நுண்துகள் செறிவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட பட்டாசுகள் வழிவகுத்தன. பட்டாசுகள் மற்றும் பயிா்க் கழிவுகள் எரிப்பால் உருவான மாசு உமிழ்வு, தீபாவளி மறுதினம் தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டை 462- ஆக அதிகரிக்கச் செய்தது. இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.