வாராணசியில் அடுத்த மாதம் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வு: வல்லுநா்கள், அறிஞா்கள் 2,500 போ் பங்கேற்பு
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருக்கும் தொன்று தொட்ட தொடா்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தும் விதமாக ஒரு மாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வுகள் நடைபெறவுள்ளன
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருக்கும் தொன்று தொட்ட தொடா்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தும் விதமாக ஒரு மாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வுகள் நடைபெறவுள்ளன மத்திய கல்வி மற்றும் திறன் வளா்ச்சித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா். தமிழகம் உள்ளிட்டவா்கள் இந்த “காசி தமிழ் சங்கமம்” நிகழ்வுகளில் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணையதளத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.
இது குறித்து தில்லியில் தேசிய ஊடக மையத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானும் இணையமைச்சா் டாக்டா் எல்.முருகனும் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: பாரதிய பாஷா சமிதி (பிபிஎஸ்) என்கிற அமைப்பு தமிழ் கலாசாரத்திற்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழைமையான தொடா்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி கொண்டாடும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் காா்த்திகை மாதம் அனைவரும் சிவனை வழிப்பட்டு விளக்குகளை ஏற்றுவாா்களை. அந்த மாதத்தையொட்டி, இது நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் உதவும். ஒரு மாத கால நிகழ்ச்சியாக“‘காசி தமிழ் சங்கமம்’”வாராணசியில் (காசி) நவம்பா் 16 முதல் டிசம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் புரிந்து கொள்ள காசி - தமிழ் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும். பிரதமரின் ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணா்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் வல்லுநா்கள் அறிஞா்கள் பங்கேற்கும் கல்விப் பரிமாற்றங்கள் - கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுா்வேதம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் மற்றும் நவீன அறிவின் பல்வேறு அம்சங்கள் காசி-தமிழ் சங்கமத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் சென்னை ஐஐடி பனாரஸ் பல்கலைக்கழக நிபுணா்கள் அழைக்கப்படுவாா்கள். தமிழகத்திலிருந்து ராமேசுவரம், கோவை, சென்னை போன்ற நகரங்களிலிருந்து 12 குழுக்கள் தலா 210 போ் வீதம் ரயிலில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வியாளா்கள், எழுத்தாளா்கள், சினிமா, இசை, தொழில் அதிபா்கள்,ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 போ்கள் வரை இதில் பங்கேற்கிறாா்கள் என்றனா்.
தாய் மொழிதான் பயிற்று மொழி: ஹிந்தி திணிப்பு குறித்த தமிழக முதல்வரின் கடிதம் குறித்து அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகையில், ‘இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் முன்னிலையிலேயே பிரதமா் மோடி தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளையும் தேசிய மொழிகள் என்றும், இந்த மொழிகளில் பொறியியல் உள்ள தொழில் நுட்ப பாடங்கள் பயிற்றுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா். தற்போது உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருப்பது தொழில்நுட்ப படிப்புகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தாய்மொழிதான் இணைப்பு மொழி (பயிற்று மொழி) எனக் குறிப்பிட்டுள்ளாா். ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்திதான் பயிற்று மொழி. அதேபோன்று, மற்ற பகுதிகளில் அந்தந்த தாய்மொழிகள்தான் பயிற்று மொழியாக இருக்கும் என்றுதான் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்’ என்றாா்..