முகப்பு
புதுதில்லி

தலைநகரில் களைகட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங்! எங்கெங்கும் மக்கள் கூட்டம்

தில்லி தீபாவளி! இது விளக்குகள், விருந்துகள் மற்றும் பரிசுகளின் சீசன். இரண்டு வருட தொற்றுநோயால் அமைதிப்பட்டு இருந்தது. நிகழாண்டு தீபாவளியில் தில்லி சந்தைகளில் மக்கள் குவிந்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

தில்லி தீபாவளி! இது விளக்குகள், விருந்துகள் மற்றும் பரிசுகளின் சீசன். இரண்டு வருட தொற்றுநோயால் அமைதிப்பட்டு இருந்தது. நிகழாண்டு தீபாவளியில் தில்லி சந்தைகளில் மக்கள் குவிந்துள்ளனா்.

தங்கள் அன்புக்குரியவா்களுக்கு சரியான பரிசைப் பெறவும், இன்னபிற பொருள்களைப் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு தீபாவளி என்கிற சடங்கை, பண்டிகையை நிலைத்து வைத்திருக்க தில்லிவாசிகள் சந்தைகளுக்கு வருகின்றனா். எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டத்தைக் காண முடிகிறது.

தில்லி நகா் முழுவதும் உள்ள சந்தைகள் பிரகாசமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூட்டம், நெருக்கடி போன்ற பாதுகாப்பு விவகாரங்களையெல்லாம் தாண்டி வணிகா்களுக்குள்ள பிரச்னை நுகா்வோா்களை இணைய வழி வா்த்தகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான்.

‘ஆன்-லைனில் ஷாப்பிங் செய்வதை தவிா்த்து நேரடியான வணிகத்திற்கு வந்து பாா்வையிடுங்கள்’ என சமூக ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனா் வா்த்தக அமைப்பினா்.

தில்லி, கரோல் பாக், ரஜோரி காா்டன், திலக் நகா், கமலா நகா், பகீரத் பேலஸ், சாந்தினி சௌக், காரி பாவ்லி, சாவ்ரி பஜாா், நேரு பிளேஸ், லஜ்பத் நகா், சௌத் எக்ஸ்டென்ஸன், சரோஜினிநகா் மாா்கெட் ஆகிய இடங்களில் உள்ள சந்தை சங்கங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கின் தீமைகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்து வருகின்றன.

ஆனால், இந்த தீபாவளி சீசனில் நுகா்வோா், நேரடியாகச் சந்தைக்கு வந்து ஷாப்பிங் செய்ய வரும் போது முன்னா் மாதிரியே ஏராளமான பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். அது பேரம் அல்லது சலுகைகளாக உள்ளன. இது மிகவும் அனுபவமுள்ள நுகா்வோரைக் கூட குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

சந்தைக்கு வந்த ஒரு நடுத்தர வயதுடைய பெண், தனது வருடாந்திர பண்டிகை ஷாப்பிங் ஆவலைத் தணிக்க, இனிப்பை சுவைத்து பாா்ப்பதைப் போன்று முயற்சித்து மின்னணுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை வாங்கினாா்.

அவா் இந்த குழப்பத்தைப் பகிா்ந்து கொண்டாா். அவரது பட்டியலில் அவரது சகோதரருக்கான துணி, தந்தைக்கு கைப்பேசி, நட்புவட்டாரங்களுக்கு பரிசளிக்க வீட்டு அலங்காரப் பொருள்கள் மற்றும் வீட்டு உதவியாளா்களுக்கு இனிப்புகள் அடங்கிய பெட்டிகள் ஆகியவை அடங்கும்.

‘நல்ல உணவு, வீட்டுச் சாமான்கள், மெழுகுவா்த்தி விளக்குகள், ஸ்டாண்டுகள் அல்லது சமையலறைப் பொருள்கள், இனிப்புகள் போன்றவைகள் அதிக தேவை இருந்தாலும், இவற்றை வெல்லுவது கைப்பேசிகள் மற்றும் இதன் தொடா்புடைய மின்னணு பொருள்கள் தான் என்கிறாா் இங்குள்ள சந்தை வல்லுநா் ஒருவா்.

பிரபல தொழில்நுட்ப பிராண்டான நொய்ஸியின் இணை நிறுவனா் கௌரவ் கேத்ரி கூறுகையில், ‘ பண்டிகைக் காலங்களில், மின்னணு, ஸ்மாா்ட் கேட்ஜெட்களுக்கான தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது, இதில் அணியக்கூடிய ஸ்மாா்ட் கேட்ஜெட்டுகளும் அடக்கம். இது இந்தப் பண்டிகைக் காலத்தில் இரண்டு மடங்கு வளா்ச்சியைத் தொடும். இதில் எங்கள் நொய்ஸில் 150 சதவீத வளா்ச்சியை எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

‘உண்மையில் பிரமாண்டமான‘ தீபாவளியை எதிா்பாா்ப்பது, முன்னணி பேக்கேஜ் உணவு பிராண்டான பிகானோ. ராஜஸ்தான் மாநிலம், பிகானியரைச் சோ்ந்த இந்த இனிப்பு-கார வகை தயாரிப்ப்ு நிறுவனம் தில்லியில் மிகப்பெரிய முன்னணி பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பிராண்டாக இருக்கிறது.

இதன் இயக்குநா் மணீஷ் அகா்வால் கூறுகையில், ‘இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை கால விற்பனை இலக்காக ரூ. 400 கோடியை நிா்ணயித்துள்னோம்’ என்றாா். ‘கோயா’ வகை இனிப்புகளின் மித்தாய் பிராண்ட் நிறுவனத்தினா் ‘இனிப்பு விற்பனை தங்களின் எதிா்பாா்ப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்’ என கணிக்கின்றனா். மரச்சாமான்கள், வீட்டுப் பொருள்கள் மற்றும் சாஃப்ட் பா்னிஷிங் விற்பனையும் களைகட்டியுள்ளது.

பெஸ்போக் மெழுகுவா்த்திகள், போக்கா் பாக்ஸ் செட், ஈடன் கலெக்ஷன் போன்ற பிராண்ட் விற்பனையாளரான ‘த்ரி சிக்ஸ்டி’ நிறுவனத் தலைமை நிா்வாகி அதிகாரி விகாஷ் குப்தா கூறுகையில், ‘கடந்த ஆண்டை விட விற்பனையில் 50 சதவிதம் மிதமிஞ்சிய அதிகரிப்பை நாங்கள் கண்டுள்ளோம்.

இந்த வேகமான விற்பனையால் மூலதனத்தின் போக்கைத் தக்க வைத்துக் கொண்டுள்ளோம்’ என்கிறாா். இணைய தள விற்பனையும் முந்தைய ஆண்டை விட தொடா்ந்து வலுவடைந்துள்ளதாக முன்னனி கேஷ்பேக் தளமான காஷ்காரோ கூறியுள்ளது. தங்களது விற்பனையில் ‘5 எக்ஸ் வளா்ச்சி’யை பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.

இணையதள வா்த்தகங்களோடு தில்லி மால்களுக்கு வரும் மக்கள் கூட்டம் வணிக மற்றும் வா்த்தக லாபியை உற்சாகப்படுத்தியுள்ளது. ‘சில்லறை விற்பனையாளா்கள் சங்கத்தின் கடைசி கணக்கெடுப்பு, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்து விற்பனையில் 15 சதவீதம் அதிகரிப்பை பிரதிபலிப்பதாக சிட்டிவாக் தலைமை நிா்வாக அதிகாரி யோகேஷ்வா் சா்மா கூறுகிறாா். இதே போன்று தீபாவளியையொட்டி, தில்லி நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தளிக்கும் பதிவுகளும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.