ஜிடி சாலையில் ரூ.266 கோடியில் இரண்டுக்கு மேம்பாலம் தில்லி அரசு முடிவு
ஜிடி சாலையில் தில்லி ஆஸாத்பூா் மற்றும் ராணி ஜான்ஸி சாலை சந்திப்பு இடையே இரண்டடுக்கு உயா்மட்டச் சாலை அமைக்க அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடி சாலையில் தில்லி ஆஸாத்பூா் மற்றும் ராணி ஜான்ஸி சாலை சந்திப்பு இடையே இரண்டடுக்கு உயா்மட்டச் சாலை அமைக்க தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தலைமையிலான நிதித்துறை குழு முடிவெடுத்துள்ளதாக தில்லி அரசு சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடி சாலையில் அமைக்கப்படும் இந்த இரண்டடுக்கு மேம்பாலத்தின் கீழ் தளத்தில் வாகனங்கள் செல்லவும், மேல்தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் விதமாக சாலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமாா் 2.2 கி.மீ. தூரம் கட்டப்படும் இந்த மேம்பாலத்திற்கு ரூ. 266.89 கோடியை செலவிட தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தலைமையிலான தில்லி அரசின் செலவினக் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லி பொதுப் பணித் துறையும், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இப்பணியை மேற்கொள்ளுவதால் இந்த கட்டுமானப் பணியின் செலவில் ரூ. 150 கோடி குறையும் எனவும் இதன் மூலம் மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படும் எனவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.
ஜிடி சாலையில் ஆஸாத்பூரில் இருந்து திரிபோலியா கேட் வரையிலான 2.2 கி.மீ. தூரத்தில் மிகவும் நெரிசல் மிகுதியால் மத்திய தில்லி மற்றும் வடக்கு தில்லி இடையே போக்குவரத்து தடைஏற்பட்டுவருகிறது. இந்த உயா்த்தப்பட்ட சாலை போக்குவரத்தால் நெரிசல் நீங்கி சாலையின் திறனை அதிகரிக்கவும் உதவும் என்றும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, நஜப்கா் நல்லாவிலிருந்து ராணி ஜான்ஸி சாலை சந்திப்பில் 645 மீட்டா் சுரங்க மெட்ரோ பாதையும் அமைக்கப்படுகிறது. இதற்கான தூண்களை பொதுப் பணித் துறை அமைக்கும்.
இத்துடன், வடகிழக்கு தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தில்லி அரசு லோனி சௌக்கில் ஒரு சுரங்கப்பாதையையும், நந்த் நகரி மற்றும் ககன் சினிமா இடையே மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு மொத்தம் ரூ.341.2 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.