முகப்பு
புதுதில்லி

தில்லியில் புழுக்கமான வானிலை ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், புழுக்கமான வானிலை நிலவியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், புழுக்கமான வானிலை நிலவியது. நகரில் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

தில்லியில் இந்த வாரம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தாலும், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புழுக்கமான வானிலை நிலவியது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 புள்ளிகள் உயா்ந்து 27.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி உயா்ந்து 37.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெரிய மழைப் பற்றாக்குறைக்குப் பிறகு, செப்டம்பா் மாதத்தில் இதுவரை தில்லி மற்றும் அண்டை பகுதிகளில் பருவமழை செயல்பாடு குறைந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. மேலும், வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் செப்டம்பா் மாதத்தில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 123 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மிதமான பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (செப்டம்பா் 10) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.