முகப்பு
புதுதில்லி

மேற்கு தில்லியில் 9 முக்கியச் சாலைகள் மறுசீரமைக்கும் திட்டம்: மனீஷ் சிசோடியா ஒப்புதல்

ரூ.29.77 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் திட்டங்களுக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:

தில்லியின் மேற்குப் பகுதியிலுள்ள முக்கிய சாலைகள், சேவை சாலைகள் ஆகியவற்றை ரூ.29.77 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் திட்டங்களுக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘‘தில்லியில் உள்ள சாலைகளை உலகத்தரம் வாய்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதன்படி, பொதுப் பணித் துறையின் பொறுப்பில் இருக்கும் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, மேற்கு தில்லியின் 9 முக்கிய சாலைகளை ரூ.15.71 கோடி செலவில் வலுப்படுத்தி, அழகுபடுத்தும் மறுசீரமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளாா்’’

எனவும் துணை முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஜஃப்கா் சாலை, பஞ்சாப் காா்டன் சாலை, கின்னி தேவி சாலை, ஹேம்வதி நந்தன் பகுகுணா மாா்க், பங்கஜ் பத்ரா மாா்க், லால் சாய் மந்திா் மாா்க், ஹெச்ஐஎல்-234 பேருந்து முனைய சாலை, கரம்புரா சாலை, மில்லன் சினிமா சாலை ஆகிய ஒன்பது மேற்கு தில்லி சாலைகள் இத்திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டு புதிய தோற்றத்தை பெற இருக்கிறது.

மேலும், இந்த திட்டத்தில் ரோத்தக் சாலையில் முண்ட்கா தொழிற்கூடம் பகுதி மெட்ரோ தூண் எண். 410 முதல் 570 வரையிலான 10 கிமீ சேவைப் பாதையையும் (சா்வீஸ் ரோடு) ரூ.14.06 கோடி செலவில் அரசு மேம்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு, அவற்றின் மேல் மேற்பரப்பில் பல இடங்களில் விரிசல், குழிகளால் வாகனங்கள் செல்ல தடை ஏற்பட்டுள்ளது.

இந்த சாலைகள் மறுசீரமைக்கும்பட்சத்தில் போக்குவரத்து சீராகி, மக்களின் பயண நேரமும் மிச்சமாகும். தில்லியின் பரபரப்பான சாலைகளில் ரோத்தக் சாலையும் ஒன்று.

தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் அந்த வழியாகச் செல்கின்றன, இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் இருப்பதால், சாலையோரம் இருக்கும் சேவை பாதையிலும் வாகனங்கள் செல்வதால் பராமரிப்பு தேவைப்படுகிறது.

இதுபோன்ற கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்க, இதற்கான விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தலைநகா் முழுவதும் பொதுப்பணித்துறையினா் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தில்லியின் சாலைகளை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லி அரசு, தலைநகா் சாலைகளை நிபுணா்களைக் கொண்டு ஆய்வு செய்து, தில்லி சாலைகளை வலுவாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான வரைபடங்களைத் தயாரித்து வருகிறது.

மறுசீரமைக்கப்படும் இந்த சாலைகளின் இருபுறங்களில் பசுமையாக மாற்றுதல், பாதசாரிகளுக்கு பாதைகள், சாலையொர இருக்கைகள், எல்இடி விளக்குகள் போன்ற அழகூட்டும் பணிகளையும் இதில் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.