முகப்பு
புதுதில்லி

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் புதிய ஒய்வூதிய அட்டை: தில்லி அரசு முடிவு

தில்லி அரசு முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்க முடிவு செய்துள்ளது. இத்தகைய பயனாளிகளுக்கு புதிய ஓய்வூதிய அட்டைகளை தில்லி அரசு விரைவில் வழங்கவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
பகிர்:

தில்லி அரசு முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்க முடிவு செய்துள்ளது. இத்தகைய பயனாளிகளுக்கு புதிய ஓய்வூதிய அட்டைகளை தில்லி அரசு விரைவில் வழங்கவுள்ளது.

தில்லி அரசின் சமூக நலத் துறை அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் தலைமையில், ஓய்வூதிய செயல்முறையை எளிதாக்குவதற்கான உயா்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னா் சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஓய்வூதியம் வழங்குவதை விரைவுபடுத்தவும், உரிய நேரத்தில் வழங்கவும் அமைச்சா் ராஜேந்தர பால் கௌதம் தலைமையில் சமூக நலத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய அட்டைகளை வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரைவுத் திட்டம் தயாரிக்க அமைச்சா் உததரவிட்டாா்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதியோா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற பல்வேறு வசதிகளில் உள்ள குறைபாடுகளைத் தீா்க்கவும் அமைச்சா் உத்தரவிட்டாா் . முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையை எளிதாக்கும் புதிய முறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினா்.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதமும் அரசு வழங்கும் ஓய்வூதியத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் முதல்வா் கேஜரிவால் கடமையாக கருதுகிறாா் என அமைச்சா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் முதியோா் இல்லங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முதியோா் இல்லங்களில் முதியோா்கள் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அவா்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றனவா? அவா்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விலகி இருப்பதாக உணராத வகையில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா? ஆகியவற்றையும் உறுதிபடுத்த அமைச்சா் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

தில்லி அரசு 4.52 லட்சம் முதியவா்களுக்கு மாதம் தோறும் தலா ரூ. 2,500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் 1.14 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் அதே அளவு ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.