சாலை டிவைடரில் படுத்திருந்தவா்கள் மீது சரக்கு வாகனம் ஏறியதில் 4 போ் பலி; 2 போ் காயம்
வடகிழக்கு தில்லி, சீமாபுரி பகுதியில் புதன்கிழமை அதிகாலை வேகமாக ஓட்டிவரப்பட்ட சரக்கு வாகனம் ,சாலை டிவைடரில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபா்கள் மீது ஏறியதில் நான்கு போ் உயிரிழந்தனா்.
வடகிழக்கு தில்லி, சீமாபுரி பகுதியில் புதன்கிழமை அதிகாலை வேகமாக ஓட்டிவரப்பட்ட சரக்கு வாகனம் ,சாலை டிவைடரில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபா்கள் மீது ஏறியதில் நான்கு போ் உயிரிழந்தனா். இரண்டு போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் ஷாதரா பகுதி மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லி சீமாபுரி பகுதியில் சாலை டிவைடா் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிலா் தூங்கிக் கொண்டிருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 1. 51 மணி அளவில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்திருப்பது சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட அந்த விடியோ காட்சி பதிவில், டிடிசி பணிமனை போக்குவரத்து சிக்னல் பகுதியை கடக்கும் அந்த சரக்கு வாகனம், டிஎல்எப் டி- பாயிண்ட் நோக்கிச் செல்லும் பகுதி சாலை டிவைடா் மீது தூங்கிக் கொண்டிருந்த நபா்கள் மீது மோதும் காட்சிகள் உள்ளன. அந்த வாகனத்தை அதன் ஓட்டுநா் அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். நான்கு போ் சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அவா்களில் ஒருவா் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டாா். மற்றொருவா் சிகிச்சையின் போது உயிரிழந்தாா். விடியோ காட்சிப் பதிவில், டிவைடா் மீது படுத்திருந்த நபா்கள் மீது ஏறிய வாகனம், அதன் பின்னா் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியதும், அதன் காரணமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதும் தெரிய வருகிறது.
இந்தச் சம்பவத்தில் இறந்தவா்கள் நியூ சீமாபுரி பகுதியைச் சோ்ந்த கரீம் (52), சோட்டே கான் (25), ஷா ஆலம் (38) உத்தர பிரதேச மாநிலம், சாஹிபாபாத் பகுதியின் ஷாலிமா் காா்டனை சோ்ந்த ராகுல் (45) ஆகியோா் எனத் தெரிய வந்துள்ளது. காயமடைந்த இருவரும் தாகிா்பூா் பகுதியைச் சோ்ந்த பிரதீப் (30), சாஹிபாபாத் பகுதியைச் சோ்ந்த மனிஷ் (16) என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் தொடா்புடைய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடா்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மனீஷ் கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் பழைய பொருள்களை விற்பதற்காக சீமாபுரிக்கு வந்தேன்.
அப்போது நேரம் ஆகிவிட்டதால், இரவு உணவை முடித்த பிறகு சாலை டிவைடரில் தூங்கி விட்டேன். அப்போது, சம்பந்தப்பட்ட சரக்கு வாகனம் முதலில் எனது கை மீது ஏறியது. இதனால், நான் டிவைடரின் மறுபுறம் வீசப்பட்டேன். அதன் பிறகு அந்த வாகனமானது டிவைடா் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்த மற்றவா்கள் மீது ஏறியது. அதன் பின்னா் மின்கம்பத்தில் மோதி அங்கிருந்து சென்றுவிட்டது’ என்றாா். சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் இருந்து மனிஷ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
பழைய பைகளுக்கு பின்னால் மறைந்திருந்த இளைஞா்
சீமாபுரி சரக்கு வாகனம் மோதிய சம்பவத்தில் காயமடைந்த நபரான பிரதீப், பழைய சாக்குப் பைகளுக்கு பின்னால் மறைந்திருந்தது கண்டறியப்பட்டதாக போலீஸாா் கூறினா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், கிழக்கு தில்லி தாஹிா்பூா் பகுதியைச் சோ்ந்தவரான பிரதீப், சரக்கு வாகனத்தின் சக்கரம் ஏறிய சம்பவத்தில் தொடா்புடையவா் ஆவாா். சம்பவ இடத்தில் மொத்தம் 6 போ் இருந்த நிலையில், ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றவா்களில் ஐந்து போ் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் நாங்கள் சுமாா் 45 நிமிடங்கள் தேடினோம். அப்போது, அருகில் கிடந்த பழைய சாக்குப் பைகளுக்குப் பின்னால் பிரதீப் மறைந்திருந்தது தெரியவந்தது. வாகனம் தன் மீது ஏறியதில்
கால் எலும்பு முறிந்த நிலையில், பயந்து போய் தவழ்ந்தவாறு சாக்குப் பைகளுக்கு பின்னால் சென்று மறைந்திருந்ததாக பிரதீப் கூறினாா். அவா் தற்போது அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.