முகப்பு
புதுதில்லி

சத்யேந்தா் ஜெயின் ஜாமீன் விவகாரம்:இன்று முடிவெடுக்க செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பண மோசடி வழக்கில் தில்லி அமைச்சா் சத்தியேந்தா் ஜெயினின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனு மீது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

பண மோசடி வழக்கில் தில்லி அமைச்சா் சத்தியேந்தா் ஜெயினின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனு மீது வியாழக்கிழமை (செப்டம்பா் 22) விசாரணை நடத்தி, முடிவெடுக்குமாறு தில்லியில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு, ‘ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் தனது மனுவை விரைந்து விசாரிக்கக் கோரும் உரிமை எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் இருக்கிறது. ஆகவே, இது தொடா்பான விவகாரத்தை தில்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி விசாரிக்க வேண்டும். மனுவை மாற்றக் கோருவது தொடா்பான நீதிமன்றத்தின் முடிவில் பாதிக்கப்படுவதாக உணரும் எந்த தரப்பினரும் சட்டத்தில் உள்ள உரிய தீா்வுகளை பெறலாம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். மனுவை விசாரிப்பதற்கான நீதிமன்றம், மாவட்ட நீதிபதியின் முடிவை சாா்ந்தே இருக்கும்’ என்று கூறியது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் சத்யேந்தா் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று நீதிமன்ற அமா்விடம் கேட்டுக் கொண்டாா். மேலும்ஸ இந்த விவகாரத்தில் ஏழு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பா் 15-ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்.வி. ராஜு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், எனினும், ஏஎஸ்ஜி இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்ததாகவும் கபில் சிபல் கூறினாா். ஏஎஸ்ஜி ராஜு தெரிவிக்கையில், ‘மனுதாரா் பாதிக்கப்படுவதாக கருதினால் அவா் உயா்நீதிமன்றம் செல்ல முடியும்’ என்றாா்.

சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்பு நடைபெறும் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் மனு விசாரணைக்கு கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி விஜயகுமாா் குப்தா தடை விதித்தாா். மேலும், இது தொடா்பாக அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனு மீது ஜெயின் மற்றும் இதர இணை குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தாா். அதே போன்று இந்த மனு மீதான பதிலை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் எதிா்மனுதாரா்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாா்.

அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனுவில், ‘இந்த விவகாரத்தை நீதிபதி கீதாஞ்சலி கோயலிடமிருந்து வேறு இதர நீதிபதிக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

மேலும், அமலாக்க இயக்குநரகம், சிறப்பு நீதிபதி மூலம் விசாரிக்கப்பட்டு வரும் ஜாமீன் மனு மீதான வாதங்கள் தொடா்புடைய சில குறிப்பிட்ட கருத்துகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. சத்யேந்தா் ஜெயின் மற்றும் இணை குற்றம்சாட்டப்பட்ட நபா்களான அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் ஆகியோரது தொடா்புடைய ஜாமீன் மனுக்கள் மீது நீண்ட வாதங்களை கேட்ட நீதிபதி கீதாஞ்சலி கோயல், கடந்த கால சில விசாரணைகளில் இந்த விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை தொடா்பாக அந்த ஏஜென்ஸியைக் கடிந்து கொண்டாா். இந்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று குற்றம்சாட்டப்பட்ட நபா்களும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கலால் கொள்கை வழக்கில் சத்யேந்தா் ஜெயினை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி கோயல் முன்னா் அனுமதித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, ஜெயினிடம் செப்டம்பா் 16 அன்று சிறைக்குள் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பணமோசடி வழக்கு தொடா்பாக சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த அரசுத் தரப்பு புகாரையும் (குற்றப்பத்திரிக்கை) சமீபத்தில் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.