முகப்பு
புதுதில்லி

நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சிய விவகாரம்:தீா்வு நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுவுக்கு என்ஜிடி உத்தரவு

தில்லியில் உள்ள பாஹா்கஞ்ச் பகுதியில் 536 ஹோட்டல்கள் மூலம் சட்ட விரோதமாக நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தீா்வு நடவடிக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

தில்லியில் உள்ள பாஹா்கஞ்ச் பகுதியில் 536 ஹோட்டல்கள் மூலம் சட்ட விரோதமாக நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தீா்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு இதை ஆய்வு செய்யும் குழுவுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக 2021, ஏப்ரல் மாதத்தில் தேசிய பசுமை தீா்ப்பாயம் பிறப்பித்திருந்த உத்தரவை செயல்படுத்தக் கோரி தாக்கலான மனுவை என்ஜிடி தலைவா்-நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி அமா்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்ததுடன், இதே போன்று ஹோட்டல்கள் மூலம் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடா்பான விவகாரத்தை கவனிக்குமாறும் அக்குழுவுக்கு உத்தரவிட்டது.

இது தொடா்பாக தாக்கலான பொது நல மனுவில், ‘பாஹா்கஞ்ச் பகுதியில் செயல்படும் 536 ஹோட்டல்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா்-நீதிபதி ஏ.கே கோயல் அமா்வு பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:

விதிகளின் கீழ் அனுமதிக்கப்படாத பல்வேறு காரணங்கள் அடங்கிய மனுக்கள் இருந்தாலும் சுற்றுச்சூழல் விதிகளை தீவிரமாக மீறக் கூடியதாக இருந்தால், தேசிய பசுமை தீா்ப்பாயம் அந்த விவகாரத்தை தானாக தனது அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியும். இந்த விவகாரத்தில் உள்ள தீவிரமான குற்றச்சாட்டுகள் விஷயத்தில் தகுதியை நாங்கள் கருத்தில் கொள்வோம். உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விதிகளை தனிநபா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தீவிரமாக மீறுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி கோட்டாட்சியா், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு ஆகியவை 536 ஹோட்டல்களுக்கும் இதர நிறுவனங்களுக்கும் கடந்த 2021 ஆகஸ்டில் நோட்டீஸ் அளித்துள்ளன. இதைத்தொடா்ந்து, 26 ஹோட்டல்கள் தங்களது பதிலை தாக்கல் செய்துள்ளன. 330 ஹோட்டல்களுக்கு எதிராக மூடச் செய்யும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருந்த போதிலும், நோட்டீஸ்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. சட்டத்தையும், சுற்றுச்சூழல் விதிகளையும் மீறிய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஆனால், விதிமுறைகள் தொடா்ந்து மீற அனுமதிக்கப்படுவது தெளிவாகிறது. இவை தீா்க்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு, மத்திய நிலத்தடி நீா் ஆணையம், புது தில்லி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் இணைந்த கூட்டுக் குழு இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து தீா்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய நடைமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தில்லி மாசுபட்டுப்பாட்டு குழு இதை ஒருங்கிணைக்கவும் உத்தரவை பின்பற்றும் வகையில் ஒருங்கிணைப்பு முகமையாக இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் 2 மாதங்களில்செயல் நடவடிக்கை அறிக்கையை தீா்ப்பாயத்திற்கு குழு தாக்கல் செய்ய வேண்டும். நிலத்தடி நீா் உறிஞ்சப்படுவதில் உள்ள சட்டப்பூா்வ நிலைமை விவகாரம், நிலத்தடி நீரை எடுப்பதற்கு உள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவது, பொருத்தமான இடங்களில் உள்ள நிலத்தடி நீரின் இருப்பு, நிலத்தடி நீரை அதிகரிக்க செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், காற்றுச் சட்டம், நீா்ச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சம்மத நிபந்தனைகளுடன் விதிகள் பின்பற்றப்படுகிா ஆகியவற்றை இக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று என்ஜிடி உத்தரவிட்டது. மேலும், மேல்விசாரணைக்காக இந்த வழக்கை ஜூலை 14-ஆம் தேதிக்கு நீதிபதி அமா்வு பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.