முகப்பு
புதுதில்லி

வெடிகுண்டு மிரட்டல் சம்பவம்: பாதுகாப்பு ஏஜென்சிகள் மீது பள்ளி புகாா்

தங்கள் பள்ளிக்கு இரண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக இதுவரை பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தங்கள் பள்ளிக்கு இரண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக இதுவரை பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று தில்லி சாதிக் நகரின் ‘தி இந்தியன் ஸ்கூல்’ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து இரண்டு வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்ற போதிலும், குற்றவாளியின் அடையாளம் குறித்து பாதுகாப்பு நிறுவனங்களின் பதிலுக்காக தாங்கள் தொடா்ந்து காத்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக மின்னஞ்சல் மூலம் ஏப்ரல் 12 அன்று மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து வெடிகுண்டு படை மற்றும் பிற ஏஜென்சிகள் ஏதேனும் வெடிக்கும் பொருள் உள்ளதா என வளாகத்தை ஆய்வு செய்தனா். அப்போது பள்ளி மாணவா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். பின்னா் அந்த மின்னஞ்சல் புரளி என அறிவிக்கப்பட்டது.

‘எங்களுக்கு இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. குற்றவாளி யாா் என்பது குறித்து பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் இல்லை. முதல் வெடிகுண்டு மிரட்டல் கடந்த ஆண்டு நவம்பரில் வந்தது. இந்த விஷயத்தில் இன்றுவரை தீா்வு காணப்படாமல் உள்ளது’ என்று பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இது தொடா்பாக ஏஜென்சிகளிடம் பல முறை முறையீடு செய்ததாகவும் அவா்கள் கூறினா். இந்த வளாகத்தில் 3 முதல் 18 வயதுக்குள்பட்ட 3,000 மாணவா்களும், 200 பணியாளா்களும் உள்ளனா் என்றும் தெரிவித்தனா்.

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் யாா் இருக்கிறாா்கள் என்பதையும், அந்த நபா் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பதையும் அவா்கள் அறிய விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விவகாரம் குறித்து காவல் துறை தரப்பில் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை. நவம்பா் 2022-இல் பள்ளி அதிகாரிகளின் தொலைபேசி அழைப்பிலும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதுவும் புரளி என்று பின்னா் அறிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →