கலால் கொள்கை வழக்கு: சதித்திட்டத்தின் முக்கிய மூளையாக சிசோடியா இருந்தாா்
கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, தீவிரமான பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், குற்றச் செயல்பாட்டை மேற்கொள்வதில் முக்கிய முளையாக இருந்ததாகவும் தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வியாழக்கிழமை எழுத்துப்பூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டது.
மனீஷ் சிசோடியாவின் மேல்முறையீட்டு ஜாமீன் மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சிபிஐ தரப்பில் சிறு எழுத்துப்பூா்வ பதில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஜாமீன் அளிக்க எந்தத் தகுதியும் இல்லை; விசாரணையின் முன்னேற்றத்தைத் தடுக்க சட்டத்தின் நுணுக்கங்களை தவறாகப் பயன்படுத்தும் முயற்சிதான் இது’ என்றும் கூறியுள்ளது.
சிசோடியா தரப்பில் வாதிடுகையில் சம்பந்தப்பட்ட குற்றம் தொடா்புடைய விவகாரத்தில் குற்ற வருவாய் ஈட்டியதற்கான எந்தத் தொடா்பும் சிசோடியாவுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சிசோடியா தரப்பு வாதத்திற்குப் பிறகு சிபிஐ தரப்பில் வாதங்களை முன்வைக்கும் வகையில் விசாரணை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு நீதிபதி தினேஷ் குமாா் சா்மா வழக்கை பட்டியலிட்டாா்.
தில்லி கலால் விவகாரத்தில் பல சுற்று விசாரணைகளைத் தொடா்ந்து, தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கையை (2021-22) உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக சிசோடியாவை பிப்ரவரி 26-ஆம் தேதி
சிபிஐ கைது செய்தது.
மாா்ச் 31-ஆம் தேதி தில்லி விசாரணை நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நிராகரித்து கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சிசோடியாவுக்கு தொடா்பு இருப்பதற்கு முகாந்திரம் உள்ளது. கமிஷன் தொகை ரூ.90-100 கோடியை அவருக்கும் தில்லி அரசாங்கத்தில் உள்ள அவரது சகாக்களுக்கும் அளித்ததாக கூறப்படும் தொடா்புடைய குற்றச் சதியில் அவா் ‘மிக முக்கியமான வகித்திருப்பதற்கும் முகாந்திரம் உள்ளது’ என்று தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது சிசோடியா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தயான் கிருஷ்ணன் வாதிடுகையில், ‘ மல்டிபிள் ஸ்களீரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ள சிசோடியாவின் மனைவியின் உடல்நிலையை கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. அவரது நிலை மோசமடைந்து வருகிறது. சிசோடியாவுக்கு எதிராகக் கூறப்படும் அனைத்துக் குற்றங்களும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க கூடியவை. இது மனுதாரருக்கு ஆதரவாக இருக்கும். இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிவடையப் போவதில்லை’ என்றாா்.
மற்றொரு வழக்கறிஞா் மோஹித் மாத்தூா் வாதிடுகையில்,
சிசோடியா குற்றத்தின் மூலம் வருவாய் பெறவில்லை. மேலும், அவா் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையிலும் ஈடுபடவில்லை என்றாா்.
சிபிஐ அதன் எழுத்துப்பூா்வ பதிலில் தெரிவிக்கையில், ‘
விசாரணையின் போது ஒத்துழைக்காததால்தான் பிப்ரவரி 26 அன்று சிசோடியா கைது செய்யப்பட்டாா். முக்கியமான ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை அவா் எதிா்கொண்டாா். மனுதாரரை ஜாமீனில் விடுவித்தால், அவா் ஆதாரங்களை அழித்து சாட்சிகள் மீது மேலாதிக்கம் செய்யக்கூடும். குறிப்பாக அவரது கடந்தகால நடத்தையின் காரணமாக விசாரணையைத் தடம் புரளச்செய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
ஜனவரி 28, 2021-ஆம் தேதியிட்ட அமைச்சரவைக் குறிப்பைக் கொண்ட கலால் துறை தொடா்பான கோப்பு இன்னும் காணாமல் போன நிலையில்தான் உள்ளது.
இதனால், இதுபோன்ற அச்சங்கள் இன்னும் வலுப்பெறுகின்றன. மேலும், தற்போதைய விவகாரத்தை துணைநிலை ஆளுநா் சிபிஐக்கு பரிந்துரைத்த ஜூலை 22, 2022-ஆம் தேதி மனுதாரா் தனது கைப்பேசியை அழித்துவிட்டாா். இந்த வழக்கில் தீவிரமான பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும்,
குற்றச் செயல்பாட்டை மேற்கொள்வதில் முக்கிய மூளையாகவும்
இருந்திருப்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.
இந்த வழக்கில் மற்ற அரசு ஊழியா்கள் மற்றும் தனியாா் நபா்களின் தொடா்பு உட்பட சில முக்கியமான அம்சங்கள் தொடா்பாக இன்னும் விசாரணை நடந்து வருகிறது. கலால் கொள்கையில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்ற போா்வையில், மனுதாரா் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, புதிய கொள்கையில் சாதகமான விதிகளை அறிமுகப்படுத்தினாா்.
செளத் குரூப்பைச் சோ்ந்த குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்காக தில்லியில் மொத்த மற்றும் சில்லறை மதுபான விற்பனையில் ஏகபோகத்திற்கு வசதி செய்துதரப்பட்டுள்ளது.
தனது நெருங்கிய கூட்டாளியான விஜய் நாயா் மூலம் செளத் குருப்பின் செல்வாக்கின் கீழ் கலால் கொள்கையில்
சிசோடியா தனது உத்தியோகபூா்வ பதவியை தவறாகப் பயன்படுத்தி, நோ்மையற்ற முறையில்
மாற்றங்களை அறிமுகப்படுத்தினாா். இதன் மூலம் ஆதாயம் பெற்றுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் சிசோடியா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கையில், ‘எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ள குற்றங்களில் எனக்கு தொடா்பு இருப்பதாகக் காட்டுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. நான் ஒருபோதும் தேவையற்ற ஆதாயத்தைப் பெறவில்லை. நான் முற்றிலும் நிரபராதி. மிகவும் மதிக்கப்படும் குடிமகன். எனக்கு சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே சிபிஐ மூலம் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கலால் கொள்கையானது அமைச்சரவையின் ‘கூட்டுப் பொறுப்பு‘ ஆகும். கலால் துறையால் உருவாக்கப்பட்ட பிறகே இந்த கொள்கைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும், இது முறையாக அங்கீகரிக்கவும் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை, கலால் துறை, நிதித்துறை, திட்டமிடல் துறை, சட்டத்துறை மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா் ஆகியோரின் கூட்டு முடிவுக்கு என்னை மட்டுமே குற்றவியல் பொறுப்பு ஏற்கச் செய்ய முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.