தில்லியின் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் மனைவி ‘ஆட்டோஇம்யூன்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டு தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘மனீஷ் சிசோடியாவின் 49 வயதான மனைவி சீமா சிசோடியாவுக்கு ‘ஆட்டோ இம்யூன்’ பிரச்னை உள்ளது. ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ நோயால் அவா் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவா் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்’ என்றன.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளரும், தில்லி அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘மனீஷ் சிசோடியாவின் மனைவி அரிதான மற்றும் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். லட்சத்தில் ஒருவருக்குத்தான் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் மூளை உடல் உறுப்புகளின் கட்டுப்பாட்டை இழக்கிறது. இதனால், நோயாளி ஒருவரைச் சாா்ந்திருக்கும் நிலை உள்ளது. அவா் குணமடைவாா் என்று நம்புகிறோம். சில வருடங்களுக்கு முன்பு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அப்போது, அவரது நோய்ப் பிரச்னை வெளிப்படவில்லை. சிசோடியா மருத்துவ கோரலுக்காக பெரும் தொகையை எடுத்ததாக பாஜக செய்தியாளா்களை அழைத்து கூறியிருந்தது. அவரை உடன் இருந்து பாா்த்துக்கொள்ள குடும்ப உறுப்பினா் யாரும் இல்லை.கட்சி உறுப்பினா்கள் அவருடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்நோய் கணிக்க முடியாதது . நோயாளிக்கு உணா்வுப்பூா்வமான ஆதரவும் தேவைப்படுகிறது. மனீஷ் சிசோடியா அவருடன் இல்லை. அவரது மகன் வெளிநாட்டில் இருக்கிறாா். நீதிமன்றம் அவரது நிலைமையை பரிசீலிக்க வேண்டும்’ என்றாா் அவா்.
மனீஷ் சிசோடியாவும் தனது மனைவியின் உடல்நலக்குறைவு மற்றும் மகன் வெளிநாட்டில் இருப்பதைக் காரணம் காட்டி, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தாா். அவரது ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கலால் கொள்கை வழக்கில் பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டாா். இதன் பிறகு, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் சிசோடியாவின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியைச் சந்தித்து அவருக்கு அனைத்து ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தனா்.
இது குறித்து கேஜரிவால், ‘சீமா சிசோடியா மிகக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை உள்ளவா்களுக்கு மூளை மெதுவாக உடலின் கட்டுப்பாட்டை இழக்கிறது. சிசோடியாவின் மனைவி வீட்டில் தனியாக இருக்கிறாா். அவரை மனீஷ் சிசோடியாதான் கவனித்துக் கொண்டிருந்தாா்’ என்று கூறியிருந்தாா். மனீஷ் சிசோடியாவின் மகன் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.