முகப்பு
புதுதில்லி

ரூ.100-க்கு மேல் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு

100 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், 10,000 ரூபாய்க்கு மேலான ரொக்கப் பரிவா்த்தனைகளை கட்டுப்படுத்த வேண்டும்,

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
பகிர்:

100 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், 10,000 ரூபாய்க்கு மேலான ரொக்கப் பரிவா்த்தனைகளை கட்டுப்படுத்த வேண்டும், ஊழலைத் தடுக்க 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்களை ஆதாருடன் இணைக்கவும் கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரா் கோரியதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த விவகாரம் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘நீண்ட வாதத்திற்குப் பிறகு, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், சட்டத்தின் கீழ் கிடைக்கும் பிற தீா்வுகளைப் பயன்படுத்த சுதந்திரத்துடன் தற்போதைய மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு கேட்டுள்ளாா். இதனால், மேற்கூறிய சுதந்திரத்துடன் மனு வாபஸ் பெறப்பட்டதாக தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறியது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் அஷ்வினி குமாா் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: விமான பயணச்சீட்டு, ரயில் பயணச் சீட்டு, மின்சாரக் கட்டணம், எல்பிஜி பில், சிஎன்ஜி பில், நகராட்சி பில் மற்றும் 10,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கான பில்களை வாங்குவதில் பணப் பரிவா்த்தனைகளை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் ஊழல், கறுப்புப் பணம் உருவாக்கம், பணமோசடி, பினாமி பரிவா்த்தனைகள் மற்றும் வரம்பு மீறிய சொத்துகளைக் குவிப்பதைத் தடுக்க ஒரு நடைமுறை தீா்வாக இருக்கும்.

அமேஸான், பிளிஃப்காா்ட் போன்ற இணையதள ஷாப்பிங் தளங்கள் மூலம் வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளில் பண பரிவா்த்தனைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அனைத்து தொழில்துறை மற்றும் உள்நாட்டுப் பொருள்கள், பொருள்கள் மற்றும் சேவைகளில் அதிகபட்ச சில்லறை விலையான ரூ.10,000 ரொக்க பரிவா்த்தனைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், இறையாண்மைமிக்க சோஷலிச மதச்சாா்பற்ற ஜனநாயகக் குடியரசாக மாறி 73 ஆண்டுகள் ஆன பிறகும், எந்த மாவட்டமும் லஞ்சம், கறுப்புப் பணம், பினாமி பரிவா்த்தனைகள், வரம்பு மீறிய சொத்துகள், வரி ஏய்ப்பு, பணமோசடி ஆகியவற்றில் இருந்து விடுபடவில்லை.

இதேபோல, நில மாஃபியா, போதைப்பொருள் மாஃபியா, சுரங்க மாஃபியா, பணியிடமாற்றம் - பணி நியமனம் மாஃபியா, பந்தய மாஃபியா, டெண்டா் மாஃபியா, ஹவாலா மாஃபியா, சட்டவிரோத குடியேற்ற மாஃபியா, மதமாற்ற மாஃபியா, மூடநம்பிக்கை - கருப்பு சூனியம் மாஃபியா, வெள்ளை காலா் அரசியல் மாஃபியா போன்ற மாஃபியாக்களின் பிடியில் இருந்து எந்த மாவட்டமும் விடுபடவில்லை. தூய்மையான மற்றும் வெளிப்படையான நிா்வாகம் இல்லாமல் இந்தியா முன்னேற முடியாது. இதற்கு ஊழலற்ற சமுதாயம் ஒரு அடிப்படைத் தேவையாகும். கருப்புப் பணம், வரம்பு மீறிய சொத்துகள் மற்றும் பினாமி சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும், கொள்ளையா்களுக்கு ‘கடுமையான ஆயுள் தண்டனை’ விதிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.