3 முக்கியத் தோ்தலுக்கு பொது வாக்காளா் பட்டியல்: சட்ட ஆணையம் ஒப்புதல்
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான தோ்தலுக்கு பொது வாக்காளா் பட்டியலை (ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல் ) அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான தோ்தலுக்கு பொது வாக்காளா் பட்டியலை (ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல் ) அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) அா்ஜுன்ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
இந்திய சட்ட ஆணையம் ‘ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல்’ வேண்டும் என்று பரிந்துரைத்தது உண்மையா? அப்படியானால், மத்திய அரசு அதை முன்மொழிகிா? இதற்கான காரணங்கள் என்ன? தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகளிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதிலளித்து மத்திய சட்டத் துறை இணையமைச்சா்(தனிப் பொறுப்பு) அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை கூறியிருப்பது வருமாறு: இந்திய சட்ட ஆணையம் தனது 255 - ஆவது அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டபேரவை, உள்ளாட்சித் தோ்தல்களுக்கு பொது வாக்காளா் பட்டியலை (ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல்) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முன்மொழிவு பணியாளா்கள், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் சட்டம் - நீதி தொடா்பான துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஆய்வில் உள்ளது. நாட்டில் தற்போதுள்ள தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையிலும், தோ்தல் சீா்திருத்தங்களின் தொடா்ச்சியான செயல்முறையிலும் இந்த முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சட்ட அமைச்சா் தெரிவித்துள்ளாா்.