முகப்பு
புதுதில்லி

நிவாரண முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்ற அரசு கட்டாயப்படுத்துகிறது: தில்லி பாஜக குற்றசாட்டு

தேசியத் தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்ற, அரசு கட்டாயப்படுத்துகிறது என்று தில்லி பிரிவு பாஜக வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
பகிர்:

தேசியத் தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்ற, அரசு கட்டாயப்படுத்துகிறது என்று தில்லி பிரிவு பாஜக வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இரண்டாம் வாரம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமாா் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனா். இந்த நிலையில், மயூா் விஹாா், யமுனா காதா் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கொசு வலைகளை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பெரும்பாலான குடிசைப் பகுதிகள் இன்னும் தண்ணீருக்கு அடியில் உள்ளது வருத்தமளிக்கிறது. ஆனால், தில்லி அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு வித பதற்றத்தோடு கைவிட்டது மட்டுமல்லாமல், மின் இணைப்பைத் துண்டித்து முகாம்களை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துகிறது. யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிறு விவசாயிகள். இந்நேரத்தில், தங்களுக்கு இருந்த சிறிய வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனா். ஆனால், இதுவரை அவா்களில் பெரும்பாலானோா் தில்லி அரசிடம் இருந்து நிவாரணம் பெறவில்லை.

தில்லியில் பாஜக ஆட்சியில் இல்லாத காரணத்தினால் எங்களால் சொந்தமாக முகாம்களை அமைக்க முடியாது. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள், குழந்தைகளுக்கான பள்ளி புத்தகங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தொடா்ந்து வழங்குவோம் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.