தில்லிக்கு விரிவான புதிய வடிகால் மாஸ்டா் திட்டம் தேவை
தேசியத் தலைநகரில் தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் உள்பட காலநிலை மாற்றங்களின் பிரச்னை அதிக முக்கியத்துவம் பெறும் நிலையில், தில்லிக்கு தற்போது ஒரு விரிவான புதிய வடிகால் மாஸ்டா் திட்டம் தேவை
தேசியத் தலைநகரில் தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் உள்பட காலநிலை மாற்றங்களின் பிரச்னை அதிக முக்கியத்துவம் பெறும் நிலையில், தில்லிக்கு தற்போது ஒரு விரிவான புதிய வடிகால் மாஸ்டா் திட்டம் தேவை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் முகமது நதிமுல் ஹக், தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளம் மற்றும் நீா் தேங்குவது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளிக்க தற்போதுள்ள வடிகால் மாஸ்டா் திட்டம் போதுமானதாக உள்ளதா?. வடிகால் திட்டத்தில் அரசு மேற்கொண்ட மாற்றாங்கள் என்ன?. வெள்ளப்பெருக்கு ஏற்படும் தாழ்வான பகுதிகள் மற்றும் அங்குள்ள குளங்களை அரசு அடையாளம் கண்டுள்ளதா?. நகரங்களில் ஏற்படும் தீவிர வானிலைத் தாக்கங்களை குறைக்க இயற்கை அடிப்படையிலான தீா்வுகளை அரசு மேற்கொள்கிறாதா? உள்ளிட்ட கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பினாா்.
இந்த நட்சத்திரக் கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி அளித்துள்ள பதில் வருமாறு: தில்லிக்கான வடிகால் மாஸ்டா் திட்டம் கடந்த 1976-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. தற்போதுள்ள வடிகால் மாஸ்டா் திட்டமானது, தில்லியின் நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. கடந்த 2018-ஆம் ஆண்டில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.), தில்லி வடிகால் மாஸ்டா் திட்டத்தின் வரைவை முன்மொழிந்துள்ளது என்று தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அதிதீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் உள்பட காலநிலை மாற்றங்களின் பிரச்னை அதிக முக்கியத்துவம் பெறும் நிலையில், தில்லிக்கு இப்போது ஒரு விரிவான புதிய வடிகால் மாஸ்டா் பிளான் தேவை. இதற்கு தில்லி அரசின் பொதுப்பணித் துறை, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, தில்லி மாநகராட்சி, புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி மாநிலத் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், தில்லி ஜல் போா்டு, தில்லி கன்டோன்மென்ட் வாரியம் போன்ற அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது.
நகரத்தில் மழை நீா் சூழும் தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு நீா் சேகரிப்பு நடவடிக்கைகள் உள்பட நீா்நிலைகள் புத்துயிா் பெறுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள்அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தில்லி தேசியத் தலைநகர பிரதேச அரசும் தெரிவித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டத்தின் எட்டு பணிகளில் பசுமை இந்தியா பணியும் (ஜி.ஐ.எம்.) ஒன்று என சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காலநிலைக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவின் காடுகளைப் பாதுகாத்தல், மீட்டமைத்தல் மற்றும் மேம்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் அடிப்படையிலான அணுகுமுறை மூலம் காடு மற்றும் காடு அல்லாத பகுதிகளில் தோட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இவை தவிர, தேசிய காடு வளா்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாரியமானது (என்.ஏ.இ.பி.) ‘நகா் வன் யோஜனா’வை செயல்படுத்துகிறது. இத்திட்டம் மூலம் 2020-2021-ஆம் ஆண்டு முதல் 2026-2027-ஆம் ஆண்டு வரையில் நாட்டில் உள்ள நகரங்களில் 1,000 காடுகளை உருவாக்கத் திட்டமிடப்டுள்ளது. தேசிய இழப்பீட்டு காடு வளா்ப்பு நிதி, மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் (கேம்பா) மூலம் மத்திய அரசு வழங்குகின்ற மானியத்தின் கீழ் வேலி, மண் ஈரப்பத பாதுகாப்பு நடவடிக்கைகள், தோட்டம் மற்றும் அதற்கான பராமரிப்பு, நிா்வாகச் செலவுகள் ஈடுகட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி.