முகப்பு
புதுதில்லி

தில்லி அரசுக் கட்டடங்களில் ஆற்றல் தணிக்கை: மின்துறை அமைச்சா் அதிஷி

தேசியத் தலைநகா் தில்லியில் 500 கிலோவாட்டுக்கு மேலான மின்சாரத்தை அனுமதிக்கும் அரசுக் கட்டடங்களில் ஆற்றல் தணிக்கை செய்யப்படவுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் 500 கிலோவாட்டுக்கு மேலான மின்சாரத்தை அனுமதிக்கும் அரசுக் கட்டடங்களில் ஆற்றல் தணிக்கை செய்யப்படவுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் அதிஷி கூறியிருப்பதாவது: எரிசக்தி திறன் பணியகத்தின் சான்றளிக்கப்பட்ட தணிக்கையாளா்களால் தில்லியில் உள்ள அரசுக் கட்டடங்கள், தெரு விளக்குகளில் ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆற்றல் தணிக்கையின் மூலம், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தும் பகுதிகளைக் கண்டறிந்து, அதை நிா்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உத்திகள் வகுக்கப்படும். அரசுக் கட்டடங்களின் ஆற்றல் தணிக்கைகள் ஆற்றல் நுகா்வைக் குறைப்பதற்கான வழிகளை பரிந்துரைப்பது மட்டுமல்லாமல், கருவூலத்தின் மீதான நிதிச் சுமையையும் குறைக்கும். இத்துடன் தில்லியின் ஒட்டுமொத்த மின் தேவையை நிலைப்படுத்தவும் இது உதவும்.

அரசின் இந்த தணிக்கையானது, கட்டடங்களுக்குள் உள்ள பல்வேறு சாதனங்களின் ஆற்றல் நுகா்வை அளவிடும். பின்னா், ஆற்றல் சேமிப்பை அடைய பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமான முறைகளை அடையாளம் காணும். தில்லி அரசின் மின் துறையானது, அதன் ‘மிஷன்-2023’- இன் கீழ் அரசுக் கட்டடங்களின் ’ஆற்றல் தணிக்கைக்கு’ முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், அரசுக் கட்டட்டங்கள் மட்டுமல்லாமல், தெருவிளக்குகளின் ஆற்றல் தணிக்கையை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது, தில்லியில் தெருவிளக்கு பராமரிப்பு முதன்மையாக தில்லி மாநகராட்சி, புதுதில்லி முனிசிப்ல கவுன்சில் மற்றும் நகர அரசின் பொதுப்பணித் துறை மூலம் கையாளப்படுகிறது.

தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) சுமாா் 6.06 லட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக வெற்றிகரமாக மாற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக தெற்கு தில்லியில் எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சுமாா் 3 லட்சம் தெரு விளக்குகளை ஆற்றல் திறனுள்ள எல்.இ.டிகளாக மாநகராட்சி மாற்றியுள்ளது. மொத்தமாக 92,000 தெருவிளக்குகள் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 22,500 தெருவிளக்குகள் எல்.இ.டி விளக்குகளாக ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள தெருவிளக்குகளை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.