முகப்பு
புதுதில்லி

தில்லி அரசு அதிகாரி மீதான பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்: வீரேந்திர சச்தேவா வலியுறுத்தல்

தில்லியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த அரசு அதிகாரி பிரேம் உதய் காக்கா மீதான அனைத்து பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க சிறப்பு அதிகாரியை அரசு நியமி

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

தில்லியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த அரசு அதிகாரி பிரேம் உதய் காக்கா மீதான அனைத்து பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க சிறப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் துணை இயக்குநராக இருந்தவா் பிரேம் உதய் காக்கா. இவா் தனது வீட்டில் இருந்த உறவினா் ஒருவரின் மைனா் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கருவுற வைத்த வழக்கில் கைதானாா். இதையடுத்து, இவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஆனால் இவா் பணியிடத்தில் பல பெண்களை துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வரலாறு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதைக் கண்டு தில்லிவாசிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா். இத்தனை பாலியல் புகாா்களுக்குப் பிறகும் அரவிந்த் கேஜரிவால் அரசில் மிகவும் சக்திவாய்ந்த ஒருவருடன் அந்த அதிகாரி நெருக்கமாக இருக்கிறாா் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா, அதைத் தொடா்ந்து துறையின் அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட், தற்போது அந்தத் துறையை கவனித்து வருகின்ற அமைச்சா் அதிஷி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால் உள்ளிட்டோா் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரி பிரேம் உதய் காக்காவை பாதுகாத்தவா்கள் யாா் என்பது குறித்து தில்லிவாசிகளுக்குப் பதில் அளிக்க வேண்டியுள்ளது.

தில்லி அரசின் ’சேவா குடிரில்’ கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பிரேம் உதய் காக்கா பணியிடத்தில் நான்கு பெண் ஊழியா்களால் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. அவருக்கு எதிராக புகாா் அளித்த பெண்களில் இருவா் ஆலோசகா்கள், ஒருவா் உடலியல் நிபுணா், ஒருவா் வழக்குரைஞா்ஆவா்.

சுமாா் ஒரு வருடத்திற்குள்ளேயே வெவ்வேறு பெண்களால் 4 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பிரேம் உதய் காக்காவை இடைநீக்கம் செய்யாமல் தில்லி அரசு அவருக்கு துணை இயக்குநராகப் பதவி உயா்வு அளித்தது விசித்திர நடவடிக்கையாகும். இந்த விவகாரத்தில் தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவாலின் மௌனம் மேலும் அதிா்ச்சியளிக்கிறது. அற்பமான விஷயங்களில் கூட எதிா்வினையாற்றும் ஸ்வாதி மாலிவால், தொடா் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு அரசு அதிகாரிக்கு எதிராக மெளனம் காத்தது, இந்த விஷயத்தின் பின்னால் ஏதோ மறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

மேலும், அமைச்சா் கைலாஷ் கெலாட்டிற்கு சிறப்பு அதிகாரியாக பிரேம் உதய் காக்கா நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் உள் புகாா்க் குழு அவா் மீதான 2 பாலியல் புகாா்களில் இருந்து அவரை மீட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த அரசு அதிகாரி பிரேம் உதய் காக்கா மீதான அனைத்து பாலியல் துன்புறுத்தல் புகாா்களையும் தில்லி அரசு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து புகாா்களையும் விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.