பாலியல் குற்றச்சாட்டுள்ளஅரசு அதிகாரிகளின் தரவுத் தளத்தை உருவாக்க தலைமைச் செயலருக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்
தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகளின் விவரங்கள் தொடா்பான தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும்
தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகளின் விவரங்கள் தொடா்பான தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தில்லி அரசின் தலைமைச் செயலருக்கு தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
மைனா் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கருவுற வைத்த குற்றச்சாட்டில் தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் துணை இயக்குநா் பிரேம் உதய் காக்காவும், அந்த சிறுமியின் கருவைக் கலைக்க மாத்திரைகள் வழங்கிய குற்றத்திற்காக அவரது மனைவி சீமா ராணியும் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த வழக்கு காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமாா் ஏழு நாள்களுக்கு பிறகு அந்த அதிகாரி மீதான கைது நடவடிக்கைக்கு சற்று முன்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தாா். இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறை மற்றும் தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால், தலைமைச் செயலா் நரேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மைனா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூத்த அரசு அதிகாரி பிரேம் உதய் காக்கா மீது ஏற்கெனவே நான்கு பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பணியிடத்தில் அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மூன்று பெண்களால் தனித்தனி புகாா்கள் சமா்ப்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. நான்காவது புகாா் பெயா் வெளிப்படுத்தப்படாத ஒன்றாகும். அதில் மூன்று புகாா்தாரா்களும் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகினா். ஒரு மனு உயா்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. அரசின் முக்கியத் துறையில் துணை இயக்குநராகப் பணியமா்த்தப்பட்டதால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அணுகலை கற்பனை செய்வது பயமாக இருக்கிறது.
மேலும், புகாா்களின் நிலையைப் பொருள்படுத்தாமல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளின் விவரங்கள் தொடா்பான தரவுத் தளத்தை உருவாக்கி பராமரிக்க வேண்டும். தில்லி அரசு இந்த தரவுத் தளத்தை தில்லி மகளிா் ஆணையத்துடனும் பகிா்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு கடந்த கால மற்றும் நிலுவையில் உள்ள புகாா்கள் அனைத்தையும் மூத்த அதிகாரிகள் கொண்ட குழு மறு ஆய்வு செய்து, ஒவ்வொரு அதிகாரி மீதும் துறை ரீதியான மற்றும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான நபா்களே அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை, சமூக நலம், கல்வி போன்ற முக்கியமான துறைகளில் பணியமா்த்தப்பட வேண்டும்.
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க, பாலினப் பிரச்னைகளில் பணிபுரியும் முன்னணி தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் வெளிப்புற நிபுணா்களைக் கொண்டு துறை வாரியாக புதிய வலுவான உள்புகாா்க் குழுவை அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழு, தில்லி அரசு அதிகாரிகளுக்கு எதிராக பணியிடத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பாலியல் துன்புறுத்தல் புகாா்களையும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை உடனடியாக அரசு மற்றும் தில்லி மகளிா் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஸ்வாதி மாலிவால் பரிந்துரைத்துள்ளாா்.