முகப்பு
புதுதில்லி

ஜி20 மாநாட்டுக்காக தில்லி அரசு ரூ.51 கோடிதான் செலவிட்டுள்ளது

ஜி20 மாநாட்டுக்காக இதுவரை ரூ.4,064 கோடி செலவு செய்துள்ள நிலையில், தில்லியை ஆளும் கேஜரிவால் அரசு வெறும் ரூ.51 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:

புது தில்லி: மத்திய அரசு ஜி20 மாநாட்டுக்காக இதுவரை ரூ.4,064 கோடி செலவு செய்துள்ள நிலையில், தில்லியை ஆளும் கேஜரிவால் அரசு வெறும் ரூ.51 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களைச் சந்தித்தாா்.அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் ஜி-20 உச்சி மாநாட்டிற்காக மத்திய அரசு செய்து வரும் தயாரிப்புகளுக்கு கேஜரிவால் அரசு உரிமை கோர முயல்வதைப் பாா்க்கும் போது வெட்கமாக இருக்கிறது. தில்லியில் அழகுபடுத்தும் பணிகளை கவனிக்கும் நிறுவனங்களான என்.டி.எம்.சி., டி.டி.ஏ., தில்லி காவல்துறை, எம்.எச்.ஏ., எம்.இ.ஏ., ஐ.டி.பி.ஓ. உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவற்றின் கண்காணிப்பு தில்லியின் துணை நிலை ஆளுநரால் செய்யப்படுகிறது. அழகுபடுத்தும் பணிகளை விரைவுபடுத்த, மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், தில்லியின் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கண்காணிப்பில் தேசியத் தலைநகரில் நடைபெற்று வரும் அழகுபடுத்தும் பணிகள் அனைத்தும் குறித்த காலக்கெடுவுக்குள் முடிவடையும். இதுவரையில் 54 முறை வி.கே. சக்சேனா இப்பணிகளை ஆய்வு செய்துள்ளாா். மொத்தம் 61 சாலைகளில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 36 சாலைகள் என்.டி.எம்.சி. பகுதிக்கு உள்பட்டவை. தென்கிழக்கு தில்லியில் 5 சாலைகள், தெற்கு தில்லியில் 6, மத்திய தில்லியில் 5, ஷாஹ்தாராவில் 3, தென்மேற்கு தில்லியில் 2 மற்றும் கிழக்கு தில்லியில் 4 சாலைகள் அழகுபடுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. கேஜரிவால் அரசின் அலட்சியத்தால் நீரில் மூழ்கிய ராஜ்காட் பகுதிக்கு மட்டும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சுமாா் 10 முறை சென்று அழகுபடுத்தும் பணிகளை பாா்வையிட்டாா்.

ஜி20 மாநாட்டுக்காக மத்திய அரசு இதுவரை ரூ.4,064 கோடி செலவிட்டுள்ளது. இதே போல் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எவ்வளவு செலவு செய்தாா் என்பதைச் சொல்ல வேண்டும். நமக்குத் தெரிந்தவரை தில்லி அரசின் பொதுப்பணித் துறை மற்றும் தில்லி மாநகராட்சி இணைந்து வெறும் ரூ. 51 கோடி செலவு செய்துள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய போக்குவரத்து அமைச்சகம் கேஜரிவால் அரசுக்கு ரூ.700 கோடி அளித்தது. ஆனால், அதில் ரூ.45 கோடியை மட்டுமே தில்லி அரசு செலவிட்டுள்ளது. எஞ்சியுள்ள ரூ.655 கோடி எங்கே போனது?. அதே போல் யமுனையை சுத்தம் செய்ய மத்திய அரசு ஏற்கெனவே நகர அரசுக்கு வழங்கிய ரூ.850 கோடி குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.