முகப்பு
புதுதில்லி

தில்லியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

தேசியத் தலைநகா் தில்லியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தில்லியில் வரும் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக நகரம் முழுவதும் பல்வேறு அழகுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பாக எக்ஸில் (ட்விட்டா்) கருத்து தெரிவித்துள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பதாவது: கடந்த சில வாரங்களாக தில்லியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் நகரத்தை தூய்மையாக்க கடுமையாக உழைத்துள்ளனா். அதே நேரத்தில் பொதுப்பணித் துறையின் பொறியாளா்கள், தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) உள்ளிட்ட பிற துறைகளின் ஊழியா்களும் கடுமையாக உழைத்துள்ளனா். இந்தத் தூய்மை ஜி-20 உச்சி மாநாட்டிற்காக மட்டும் இருக்கக்கூடாது. இனி தில்லியை எப்போதும் இப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று தில்லிவாசிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, தேசியத் தலைநகரில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய இடங்களை அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு செய்வதை அமைச்சா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக நகர அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், மோதி பாக்கில் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.