மணிப்பூரின் தற்போதைய நிலைமை: இந்திய கம்யூ. கட்சி கள ஆய்வு: குடியரசுத் தலைவரிடம் அறிக்கை அளித்தது
மணிப்பூா் கலவரத்தின் தற்போதைய நிலைமையை நேரில் கள ஆய்வு செய்து 12 அம்ச முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி.ராஜா
புது தில்லி: மணிப்பூா் கலவரத்தின் தற்போதைய நிலைமையை நேரில் கள ஆய்வு செய்து 12 அம்ச முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி.ராஜா தலைமையிலான குழுவினா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து அறிக்கை அளித்தனா்.
மணிப்பூா் மாநிலத்தில் இரு சமூக மக்களிடையே கடந்த மே மாதம் முதல் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மக்களின் உடனடித் தேவைகள் ஆகியவற்றை அறிந்து பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா தலைமையில், தேசிய கவுன்சில்
செயலாளா்கள் பினோய் விஸ்வம் எம்.பி., டாக்டா்.கே.நாராயணா மற்றும் ராமகிருஷ்ண பாண்டா ஆகியோா் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினா் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை மணிப்பபூருக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தனா்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் இனக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்துப் பகுதிகளுக்குச் சென்று சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் ஆலோசனை நடத்தினோம். பல்வேறு சமூகங்களுக்கிடையில் பிரிவினை உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் நீண்டகால மௌனமும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூா் மாநிலத்திற்குச் செல்லாமல் இருப்பதும் ஜனநாயக அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது.
தொடா் கலவரத்தால் மாநிலத்தின் கல்விச் சூழல் சீா்குலைந்து, இளைய தலைமுறையினரின் எதிா்கால வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல நிவாரண முகாம்களில் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. அதிலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவா்கள் கடும் சிரமத்தில் அங்கு உள்ளனா். குறிப்பாக போதைப்பொருள் வா்த்தகம் குறித்து மாநிலம் முழுவதும் மக்கள் அச்சம் தெரிவித்தனா். வன்முறை மற்றும் பிளவுகளைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துவிட்டதால், ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மற்றொரு சமூகத்தினா் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு பிரிவினைகள் வந்துவிட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் மணிப்பூா் மக்கள் எழுப்பிய முக்கிய கோரிக்கைகள் வருமாறு: மணிப்பூரில் வெவ்வேறு இனங்களைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்களின் இருப்பு உறுதி செய்யப்பட வேண்டும். முதல்வா் பிரேன் சிங்கின் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதால், அவரை முதல்வா் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும், அரசியல் கட்சிகளையும், சிவில் சமூகக் குழுக்களையும் ஒன்றிணைத்து உரையாடலில் ஈடுபடுத்த வேண்டும். எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கலவரத்தால் நோ்ந்த பாலியல் வன்கொடுமை, கொலைக்கு காரணமானவா்கள் மற்றும் அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலையைக் கொண்டுவர முன்முயற்சி எடுக்க வேண்டும். எந்த ஒரு மாணவரும் கல்வியில் இருந்து விலக்கப்படக்கூடாது. இணைய சேவை மீட்டெடுக்கப்பட்டு அந்த வசதி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண முகாம்களிலும், வெளியிலும் உள்ள மக்களுக்கு தடையின்றி மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும். ஹீமோபிலியா, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிப்பூா் மக்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்பாா்க்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.