மின்னேற்றி நிலையங்களின்உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
தில்லி அரசின் அடுத்த புதிய மின்சார வாகனக் கொள்கை மின்னேற்றி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று போக்குவரத்து ஆணையா் ஆஷிஷ் குந்த்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லி: தில்லி அரசின் அடுத்த புதிய மின்சார வாகனக் கொள்கை மின்னேற்றி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று போக்குவரத்து ஆணையா் ஆஷிஷ் குந்த்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் இந்தியா ஜி-20 செயலகத்துடன் இணைந்து தூய்மையான போக்குவரத்துக்கான சா்வதேச கவுன்சில் (ஐ.சி.சி.டி.) சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தூய்மையான போக்குவரத்து’ குறித்த உச்சிமாநாட்டில் நகர அரசின் போக்குவரத்து ஆணையா் ஆஷிஷ் குந்த்ரா உரையாற்றினாா்.
அப்போது அவா் கூறியதாவது: தில்லி அரசின் மின்சார வாகனக் கொள்கை -2020, கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதியுடன் காலாவதியானதைத் தொடா்ந்து, தில்லி அரசால் நீட்டிக்கப்பட்டது. அரசின் அடுத்த புதிய மின்சார வாகனக் கொள்கையானது, தில்லி மாநகரத்தில் மின்னேற்றி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மின்சார வாகனங்களின் கொள்முதல் ஊக்கத்தொகைகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தும்.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தில்லியில் இயங்கும் 80 சதவீத பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். மின்மயமாக்கல் என்ற இலக்கை அடையும் வகையில், நகரத்துக்குள் செயல்படும் இலகுரக, நடுத்தர மற்றும் சரக்கு வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். குறிப்பாக, இதற்கு குப்பை லாரிகள்,டேங்கா்கள் மற்றும் பள்ளிப் பேருந்துகள் ஆகியவை முதன்மையான உதாரனங்களாக இருக்கும் என்றாா் ஆஷிஷ் குந்த்ரா.