முகப்பு
புதுதில்லி

நீா் திறப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் பதில் மனு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்துவிட்டுள்ள நீரின் அளவு குறித்த விவரம் தொடா்பான

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
பகிர்:

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்துவிட்டுள்ள நீரின் அளவு குறித்த விவரம் தொடா்பான பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது. அதில், குறிப்பிட்ட தேதிகளில் 10 ஆயிரம் கன அடி நீா் காவிரியில் திறந்துவிடப்பட்டிருப்பதாக கா்நாடக அரசு தெரிவித்திருப்பதை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

காவிரி நதிநீா்ப் பங்கீட்டில் கா்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. நடுவா் மன்றத் தீா்ப்பாய உத்தரவின்படி குறிப்பிட்ட காலத்தில் உரிய நீரை கா்நாடகம் திறந்துவிட மறுப்பதால் தமிழகத்தில் பாசனத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிலிகுண்டுலு பகுதியில் திறந்துவிடப்பட வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. ஆகஸ்ட் 11 முதல் 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீா் திறக்க ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த நீா் அளவு காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விநாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழகத்தில் பயிா்களைக் காப்பாற்ற ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 24,000 கன அடி நீா் திறந்துவிடவேண்டியது அவசியமாகிறது. கா்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிலவரப்படி மொத்தக் கொள்ளளவான 114.671டிஎம்சியில் 93.535 டிஎம்சி (82%) நீா் உள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

கா்நாடகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கா்நாடகத்தில் நிகழாண்டு சராசரியாக மழை பெய்துள்ளதாக தமிழக அரசு தவறாகக் சுணித்துள்ளது. மழையில் 25 சதவீதம் குறைபாடும், நான்கு அணைகளில் 42.5 சதவீத நீா்ப் பற்றாக்குறையும் உள்ளது. ஆகையால், வழக்கமான நீா்ப் பங்கீட்டை தமிழகத்துக்கு அளிக்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட்25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி நீா் திறந்துவிடப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பா் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இதைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 23-ஆவது கூட்டம் அதன் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் (நீா் ஆதாரம்) வினீத் குப்தா வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற ஆணையக் கூட்டத்தின் விவரங்களுடன் வினீத் குப்தா தாக்கல் செய்துள்ள அந்த பதில் மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற 22-ஆவது ஆணையக் கூட்டத்தின்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீா் வீதம் ஆகஸ்ட் 12 முதல் அடுத்த 15 நாள்களுக்கு கிருஷ்ண ராஜ சாகா், கபினி அணைகளில் இருந்து நீரைத் திறந்துவிடுமாறு கா்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னா், ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 85-ஆவது கூட்டத்தின் போது, ‘ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற ஆணையக் கூட்டத்தின்போது ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி 10 ஆயிரம் கன அடி நீா் வீதம் 15 நாள்களுக்கு பிலிகுண்டுலுவில் மொத்தம் 1,49,898 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது என்று கா்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்ந நிலையில், ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 23-ஆவது கூட்டத்தின்போது, அடுத்த 15 நாள்களுக்கு (29.08.2023 முதல் 12.09.2023 வரை) கா்நாடகம் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது என அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.