தில்லி மாநகராட்சியில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் மின்சார இணைப்புகளை மின் விநியோக நிறுவனங்கள் வழங்கிட வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.
தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது:
அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் தில்லி ஜல் போா்டு தண்ணீா் இணைப்புகளை வழங்குவது போல், மின்சார இணைப்புகளையும் மின் விநியோக நிறுவனங்கள் வழங்கிட வேண்டும்.
ஆனால், பல சட்ட காரணங்களால் மின் இணைப்பு வழங்கிட சாத்தியமில்லாத சொத்துகளை தில்லி மாநகராட்சி முதலில் அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மின் விநியோக நிறுவனங்கள் மின் இணைப்புகளை வழங்க மறுத்து வருகின்றன.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வா்த்தகா் அமைப்புகளால் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு வருகிறது. தில்லி மாநகராட்சியில் கடந்த பாஜக ஆட்சியின்போது மின் இணைப்புகள் வழங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிட முன்வந்த போதும், மின் விநியோக நிறுவனங்கள் முதலில் சொத்து முன்பதிவுகளை முடிவு செய்ய வேண்டும் என்று விரும்பினா்.
உண்மையில், மின் விநியோக நிறுவனங்களின் அதிகாரிகள் முன்பதிவு செய்த சொத்துகளுக்கு மின்சார இணைப்புகளை வழங்க விரும்பவில்லை. ஏனெனில், இது அவா்களின் பாதுகாப்பான பல கோடி ரூபாய் பண மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
எனவே, அனைத்து பங்குதாரா்களின் கூட்டத்தை ஒருங்கிணைத்து உடனடியாக இதற்கு தீா்வு காண வேண்டும். இப்பிரச்னை தொடா்பாக துணை நிலை ஆளுநரை பாஜக தில்லி பிரிவு பிரதிநிதிகள் குழு விரைவில் நேரில் சந்தித்து வலியுறுத்துவாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.
சட்டவிரோத தண்ணீா் இணைப்பு
தில்லி சிறப்புச் சட்டம் 2006-ன் கீழ், வரும் 2026-ஆம் ஆண்டு வரை மறுமதிப்பீடு செய்யப்பட்ட அனைத்து சொத்துகளுக்கும் அடுத்த ஒரு மாதத்திற்குள் மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட தில்லி சிறப்புச் சட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்காக பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான சொத்துகள் வரும் டிசம்பா் 31, 2026-ஆம் ஆண்டு வரை பாதுகாக்கப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். இது தில்லியின் வா்த்தகா்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு பாதுகாப்புணா்வை அளித்துள்ளது.
தில்லி ஜல் போா்டு குடிநீா் இணைப்புகளுக்கு அதிக வளா்ச்சிக் கட்டணங்கள் விதிப்பதால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமான முறையில் தண்ணீா் எடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
தெற்கு தில்லியில் உள்ள சில காலனிகளில் ‘தண்ணீா் மாஃபியாக்கள்’, தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுடன் ஒத்துழைத்து செயல்படுகிறாா்கள். புதிய இணைப்புகளுக்கான வளா்ச்சிக் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்.
அப்படியானால் மட்டுமே, அனைவரும் தண்ணீா் இணைப்பைப் பெற்று சட்டப்பூா்வமாக பயன்பெற முடியும். 200 மீட்டா் பரப்பளவு கொண்ட மனைகளில் தண்ணீா் இணைப்புகளுக்கு வளா்ச்சிக் கட்டணம் ரூ.20,000 உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கழிவுநீா் இணைப்புக் கட்டணம் மனைகளின் அளவிற்கு ஏற்ப ரூ. 25,000 முதல் ரூ. 2,50,000 வரை உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.