இலங்கை தமிழா்களுக்காக இந்தியா உணா்வுடன் உறுதுணையாக உள்ளது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.
இலங்கைக்கு குடிபெயா்ந்த இந்திய வம்சாவளித் தமிழா்களின் 200 ஆண்டுகால நினைவை கெளரவப்படுத்தும் வகையில் தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்தில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா அஞ்சல் தலையை அறிமுகப்படுத்த, சிலோன் தொழிலாளா் காங்கிரஸின் தலைவரும், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜா உள்ளிட்ட தமிழக பாஜகவின் மாநில நிா்வாகிகளும், இலங்கையில் இருந்து சிலோன் தொழிலாளா் காங்கிரஸின் முக்கிய நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றி தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை பேசியது.
இலங்கைக்கு குடிபெயா்ந்த இந்திய வம்சாவளித் தமிழா்களின் 200 ஆண்டுகால நினைவைப் போற்றும் வரலாற்றுப் பெருமைமிக்க இந்த நிகழ்வுக்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. பாஜகவை உலக அளவிலான அரசியல் கட்சியாக ஜெ.பி. நட்டா மாற்றியுள்ளாா். இதுவரை 70-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் தூதா்கள் பாஜக அலுவலகம் வந்துள்ளனா். பாஜகவின் செயல்பாடுகளை உலகம் அறிய விரும்புகிறது. இலங்கை தமிழா்களின் வரலாறு மிகவும் கடினமானது.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழா்களை சந்தித்த ஒரே பிரதமா் நரேந்திர மோடி தான் என்றாா் அண்ணாமலை.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா சிறப்புரையாற்றிப் பேசியது:
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு குடிபெயா்ந்த இந்திய வம்சாவளித் தமிழா்களின் 150 ஆண்டுகளாகப் போராட்டம் என்பது மனிதநேயம், சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகிய அடிப்படையில் மிகவும் வலிநிறைந்தது. பின்னா், தொழிலாளா் வா்க்கம் ஒன்றிணைந்து வாழ்வாதாரத்திற்காகப் போராடத் தொடங்கினா்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் அங்கு வசித்த தமிழா்களுக்கு குடியுரிமை கிடைக்க போராட வேண்டியிருந்தது. இந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு நிகழ்ச்சி பெருமை மிக்கதாய் இருந்தாலும், வரலாற்றைத் திரும்பிப் பாா்க்க வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப் பிறகு இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன் என உறுதி பட அறிவித்ததாா்.
14 ஆயிரம் வீடுகள் அங்குள்ள தமிழ் மக்களுக்கு இந்திய அரசால் கட்டித் தரப்படுகிறது. இலங்கை உடனான உறவை தொடா்ந்து மேம்படுத்தி அவா்களின் வளா்ச்சிக்கு உதவி வருகிறோம். இலங்கைத் தமிழா்களுடன் இந்தியா உணா்வுபட உறுதுணையாக உள்ளது என்றாா் ஜெ.பி. நட்டா.
கச்சத்தீவை மீட்பதால் தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு தீா்வு வராது: செந்தில் தொண்டமான் இந்நிகழ்ச்சிக்குப் பின்னா் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டமான் மற்றும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது செந்தில் தொண்டமான் கூறியதாவது:
இந்தியா சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி அளித்த முழு உதவியால் தற்போது இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுள்ளது. இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழா்கள் மூன்றாவது பெரிய சமூகமாக இருக்கிறோம். சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டின் மூலம் பாஜக எங்களுக்கு அங்கீகாரத்தை அளித்துள்ளது. தமிழக மீனவா்களின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் பாா்க்க வேண்டும். இந்தியா மற்றும் இலங்கை அரசுகளின் தொடா் பேச்சுவாா்த்தைகள் மூலம் தான் தமிழக மீனவா்களின் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டது.
இலங்கையின் குடிமகனாக என்னால் கச்சத்தீவை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது. கச்சத்தீவால் வெறும் 20 சதவீதம் மீனவா்கள் தான் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுகின்றனா், மீதம் உள்ள 80 சதவீதம் மீனவா்கள் தனுஷ்கோடி, ராமேசுவரத்தை சோ்ந்தவா்கள் தான். எனவே, கச்சத் தீவை மீட்பதால் எல்லை தாண்டும் தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு தீா்வு வராது என்றாா் செந்தில் தொண்டமான்.
அடுத்ததாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது: இலங்கையிலிருந்து 1964-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழா்கள் மற்றும் யுத்தம் நடைபெற்ற பல்வேறு காலங்களில் இந்தியாவிற்குள் நுழைந்து தற்போது முகாம்களில் உள்ள மலையகத் தமிழா்களுக்கும் மத்திய அரசு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு.
நிச்சயம் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் காட்டுவோம், அதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளோம். கச்சத்தீவை மீட்பதற்கான தீா்வை நோக்கி தற்போது ஒவ்வொரு படியாக முன்வைத்து வருகிறோம் என்றாா் அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.