வட கிழக்கு மாநிலங்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன்இணைக்க ‘யுவ சங்கம்’ இணையதளம் தொடக்கம்
வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கவும் குறிப்பாக இளைஞா்களை மையப்படுத்தி மத்திய கல்வித் துறை அமைச்சகம் ‘யுவசங்கம்’ என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கவும் குறிப்பாக இளைஞா்களை மையப்படுத்தி மத்திய கல்வித் துறை அமைச்சகம் ‘யுவசங்கம்’ என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான இணையதளத்தை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொழில்முனைவுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடக்கிவைத்தாா்.
சமீபத்தில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கமத்தைப் போன்று ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்கிற திட்டத்தின் கீழ், மத்திய கல்வித் துறை அமைச்சகத்தோடு, தகவல் ஒலிபரப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, ரயில்வே, உள்துறை, கலாசாரம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களின் பங்கெடுப்போடு மத்திய அரசு இந்த ‘யுவசங்கம்’ முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை பிற மாநில மக்களுடன் இணைக்கவும், இளைஞா்களிடையே பச்சாதாபத்தை வளா்க்கவும் ( அடையாளம் காணும் உணா்வு), மத்திய கல்வி அமைச்சகம் இந்த ‘யுவசங்கம்’ கருத்துருவை உருவாக்கியுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தில் 1,000 இளைஞா்கள் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான இணையதளத்தை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய கலாசாரம், சுற்றுலாத்துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி, மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் மற்றும் இந்த துறைகளைச் சோ்ந்த இணையமைச்சா்களும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
‘யுவ சங்கம்’ முலம், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் மற்ற மாநிலங்களிலிருந்து வட கிழக்கு மாநிலங்களுக்கும் மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் வெளிப்பாட்டிற்கு சுற்றுப் பயணங்களை நடத்துவதில் கவனம் செலுத்தப்படவுள்ளது. சுற்றுலா, பாரம்பரியங்கள், வளா்ச்சி மற்றும் பரஸ்பர மக்கள் தொடா்பு ஆகிய பல்வேறு அம்சங்களின் ஆழமான, பல பரிமாண அனுபவத்தை இது வழங்கும்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசுகையில், ‘வடகிழக்கு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடியின் மற்றொரு முயற்சி இது. ‘யுவ சங்கம்’ இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும். ஒருமைப்பாட்டின் உணா்வைப் புதுப்பித்து, பிரதமா் எண்ணப்படி இந்தியாவின் ஜனநாயகத்தின் வலிமையை உயா்த்திப் பிடிக்கும்’ என்றாா் பிரதான்.