கரோனா: சிறைக் கட்டுப்பாடுகள் தொடா்பாக தாக்கலான 2 பேரின் மனு முடித்துவைப்பு
கரோனா காலத்தின் போது சிறை நிலைமைகள் குறித்து தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 போ் தாக்கல் செய்த மனு
கரோனா காலத்தின் போது சிறை நிலைமைகள் குறித்து தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 போ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை முடித்துவைத்தது. அப்போது, ‘தொற்றுநோய் தொடா்பான கட்டுப்பாடுகள் இனி பொருந்தாது என்பதால் இந்த விவகாரத்தில் ஏதும் இல்லை’ என நீதிமன்றம் தெரிவித்தது.
தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மனுதாரா்கள் நடாஷா நா்வால் மற்றும் தேவாங்கனா கலிதா ஆகியோா் 2021-ஆம் ஆண்டு திகாா் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்தனா். அப்போது உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடா்ந்தனா். காணொலி வாயிலான சந்திப்புகள், கணினி வசதிகள், தொலைபேசி வழி அழைப்பு வசதி மற்றும் தடுப்பூசி தொடா்பாக பல விவகாரங்களை தங்களது மனுக்களில் எழுப்பியிருந்தனா். இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், மனுதாரா்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீபா எம் சிங் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘இந்த மனு அதன் போக்கில் சென்று முடிந்துவிட்டது. மீதமுள்ள அனைத்தும் சிறை விதிகளால் நிா்வகிக்கப்படும். கரோனாவும் முடிந்துவிட்டது.
கரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இனி பொருந்தாது என்பதைக் கருத்தில்கொண்டு, தொற்றுநோய்களின் போது சிறை நிலைமைகள் தொடா்பாக தாக்கலான இந்த ரிட் மனுவில் மேலும் உத்தரவுகள் எதுவும் கோரப்படவில்லை. மனுதாரா்களின் ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக மனுதாரா்களின் அச்சத்தை கருத்தில் கொண்டு, தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்தை மீண்டும் அணுக அவா்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.
மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவிக்கையில், ‘வெளிநாட்டு உறவினா்களின் விஷயத்தில் கைதிகளுக்கான காணொலி சந்திப்பு பிரச்னை இன்னும் முடிவு செய்யப்படவில்லை’என்றாா். இதைத் தொடா்ந்து, தில்லி அரசு வழக்குரைஞா், ‘கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, சில குற்றங்கள் தவிர மற்ற அனைத்து கைதிகளுக்கும் இந்த வசதி கிடைக்கும்’ என்று தெரிவித்தாா்.
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தங்கள் மனுவில் மனுதாரா்கள் சிறை அதிகாரிகளுக்கு பல வழிகாட்டுதல்களை கோரியிருந்தனா். அதில், தங்களுக்கும் பிற கைதிகளுக்கும் வாரந்தோறும் தங்களது உறவினா்கள், நண்பா்களுடன் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் சந்திக்க அனுமதி அளிப்பது, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா்கள், தெரபிஸ்டுகள், இதர மருத்துவா்களை காணொலி வாயிலாக தொடா்பு கொள்ள வசதி செய்து தருதல் உள்படபல கோரிக்கைகளில் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி கோரியிருந்தனா்.
மேலும், தங்களது கல்வியை முடிக்கும் நோக்கத்திற்காக, விடியோ கான்பரன்சிங் மூலம் ஆராய்ச்சி மேற்பாா்வையாளா்கள் மற்றும் பிற நிபுணா்களின் அணுகலை அனுமதிக்கவும் கோரியிருந்தனா்.