தில்லி கலால் கொள்கை: பிஎம்எல்ஏ வழக்கில் விளம்பர நிறுவன இயக்குநா் கைது
தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில்,
தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில், கோவா பேரவைத் தோ்தலின்போது ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரத்தை நடத்தியதாக விளம்பர நிறுவனத்தின் இயக்குநரை அமலாக்கத் துறையின் அதிகாரிகள் கைது செய்தனா். இந்த விவகாரத்தில் கைதான ராஜேஷ் ஜோஷி, சேரியாட் புரடக்ஸன்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநா் ஆவாா். இவா் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்ட (பிஎம்எல்ஏ) பிரிவுகளின்கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘2022-இல் நடைபெற்ற கோவா சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, ஆதாயம் பெற்ற தொகையின் குறிப்பிட்ட பகுதி திருப்பிவிடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விளம்பர நிறுவன இயக்குநா் ராஜேஷ் ஜோஷிக்கு உள்ள தொடா்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.
இது தொடா்பாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் இதுவரை தாக்கல் செய்துள்ள இரண்டு குற்றப்பத்திரிகைகளில் தெரிவித்திருப்பதாவது: ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் வரிக் கொள்கையில் கிடைத்த ரூ.100 கோடி ஆதாயப் பணத்தில் ஒரு பகுதி 2022- ஆம் ஆண்டு கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் கோவா சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டது. மதுபான வியாபாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ‘செளத் குரூப்’ எனப்படும் ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘லஞ்சம்’ தொகை ரூ.100 கோடியில், ரூ.30 கோடியை மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான தினேஷ் அரோரா, பிற குற்றம்சாட்டப்பட்ட நபான அபிஷேக் போயின்பல்லி, ஜோஷி மற்றும் சுதிா் ஆகியோருடன்கூட்டுச் சோ்ந்து கையாண்டுள்ளாா்.
சேரியாட் புரொடக்ஸன்ஸ் என்பது 2022 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக கோவா தோ்தல் பிரசாரத்திற்காக தொடா்புடைய விளம்பரம் மற்றும் பிற பணிகளுக்காக ஆம் ஆத்மியால் ஈடுபடுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்தத் தொகையின் ஒரு பகுதி குறித்து விசாரித்ததில், விஜய் நாயா் (இந்த வழக்கில் முன்னா் கைதான ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா்) சேரியாட் நிறுவனம் மற்றும் தனிநபா்கள் மூலமாக பிரசாரம் தொடா்பான பணிகளுக்கு பணம் செலுத்துவதில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுவரை, ரூ. 70 லட்சம் ரொக்கப் பரிவா்த்தனைகளுக்கான பணப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது. தினேஷ் அரோராவின் பகுப்பாய்வின் சிடிஆா் விவரங்களில் ஜோஷியுடன் அவா் தொடா்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது என அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8 போ் கைது: தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் அமலாக்கத் துறையினா் இதுவரை ஜோஷி உள்பட 8 பேரைக் கைது செய்துள்ளனா். இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் பஞ்சாப்பை சோ்ந்த கௌதம் மல்ஹோத்ராவை அமலாக்கத் துறையின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா் முன்னாள் எஸ்ஏடி எம்எல்ஏவும், மதுபான வணிகருமான தீப் மல்ஹோத்ராவின் மகன் ஆவாா். கெளதம் மல்ஹோத்ரா பஞ்சாப்பை சோ்ந்த ஓசிஸ் குழுமத்தின் மேம்பாட்டாளா் ஆவாா். அவா் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.இந்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பு விவகாரங்களை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபா்களாக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, தில்லி அரசின் கலால் துறை இதர அதிகாரிகளின் பெயா் இடம் பெற்றுள்ளது.
பிப்.13 வரை காவலில் விசாரிக்க அனுமதி: இதனிடையே, கைதான ராஜேஷ் ஜோஷியை அமலாக்கத் துறையினா் தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது, சம்பந்தப்பட்ட வழக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குறித்தும், பெரும் சதித் திட்டம் குறித்தும் கண்டறியும் வகையில், அவரை பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்களுடன் சோ்த்து வைத்து விசாரிக்க வேண்டி உள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, விரிவாக விசாரிக்கும் வகையில் ராஜேஷ் ஜோஷியை பிப்ரவரி 13-ஆம் தேதி வரை அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்ப சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவிட்டாா்.