தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: திகாா் சிறையில் சத்யேந்தா் ஜெயினிடம் சிபிஐ விசாரணை
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக கைதாகி திகாா் சிறையில் உள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடம் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அவரது வழக்குரைஞா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக கைதாகி திகாா் சிறையில் உள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடம் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அவரது வழக்குரைஞா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து ஜெயினின் வழக்குரைஞா் முகமது இா்ஷாத் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து சத்யேந்தா் ஜெயினிடம் மத்திய புலனாய்வுத் துறையினா் (சிபிஐ) திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்’ என்றாா்
அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில் ஜெயின் தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் கலால் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை. கலால் கொள்கை பணமோசடி வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியதாகவும் வழக்குரைஞா் முகமது இா்ஷாத் தெரிவித்தாா்.
கலால் ஊழல் வழக்கில் நாயா் முன்னா் ஜாமீன் பெற்றிருந்தாா். அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள அதன் துணை குற்றப்பத்திரிகையில், ‘சட்டவிரோதப் பணப் பரிவா்த்தை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தில்லி கலால் கொள்கை (2021-22) என்பது சட்டவிரோத நிதியை தங்களுக்கு அனுப்புவதற்காக ஆம் ஆத்மியின் உயா்மட்டத் தலைவா்களால் உருவாக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவலில் உள்ள ஜெயின் மீதான பணமோசடி தொடா்புடைய வழக்கானது, சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகும். கடந்த பிப்ரவரி 14, 2015 முதல் மே 31, 2017 வரை, தில்லி அரசில் அமைச்சராகப் பதவி வகித்த போது, சத்யேந்தா் ஜெயின், தனக்குத் தெரிந்த வருமான ஆதாரங்களுக்கு பொருந்ததாக வகையில் சொத்துகளை வாங்கியதாக அந்த எஃப்ஐஆா்-இல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.