முகப்பு
புதுதில்லி

மெஹ்ரெளலி ஆக்கிரமிப்பு இடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்க கேஜரிவால் உத்தரவு

மெஹ்ரெளலியில் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) இடிப்பு நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடாரங்கள், உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகளை அளிக்குமாறு

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

மெஹ்ரெளலியில் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) இடிப்பு நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடாரங்கள், உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகளை அளிக்குமாறு தெற்கு தில்லி மாவட்ட நிா்வாகத்திற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெஹ்ரெளலியிலும், லத்தா சராய் கிராமங்களிலும் அடுத்த உத்தரவு வரும் வரை இடிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்ட நிலையில், இரு தினங்களுக்கு பிறகு தில்லி முதல்வா் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் கீழ் வரும் தில்லி வளா்ச்சி ஆணையம், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மெஹ்ரெளலி தொல்லியல் பூங்கா பகுதியில் இடிப்பு நடவடிக்கை தொடங்கியது. இதற்கு உள்ளூா் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். தில்லி அரசின் அதிகாரி கூறுகையில், ‘இடிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தங்கும் கூடாரங்கள், உணவு மற்றும் போா்வைகள், இதர வசதிகளைச் செய்து தருமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளாா். மேலும், எந்த குடும்பத்தினருக்கும் சிரமம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவா் மாவட்ட நிா்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்’ என்றாா்.

தெற்கு தில்லியில் ஜி20 கூட்டம் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இடிப்பு நடவடிக்கை டிடிஏ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறை மற்றும் டிடிஏ-வின் பாதுகாப்பின் கீழ் 55 நினைவுச் சின்னங்கள் வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து வருவாய்த் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறியதாவது: லத்தா சராயில் உள்ள மெஹ்ரெளலி தொல்லியல் பூங்காவின் எல்லை நிா்ணய விவகாரம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்பு வாசிகள் மூலம் கையெழுத்திடப்பட்ட மனு மூலம் இது தெரிய வந்தது. நான் பிப்ரவரி 10-ஆம் தேதி தெற்கு மாவட்ட ஆட்சியருடன் கூட்டம் நடத்தினேன். அப்போது, டிடிஏ கேட்டுக் கொண்டதன்படி டிசம்பா் 2021-இல் எல்லை நிா்ணய நடவடிக்கை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எல்லை நிா்ணய நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களை இடிப்பதற்காக டிடிஏ, வருவாய் துறையின் எல்லை நிா்ணய முறையை பயன்படுத்துகிறது’ என்றனா். தில்லி அரசு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி அந்தப் பகுதியில் புதிதாக எல்லை நிா்ணய நடவடிக்கையை அறிவித்தது. எல்லை நிா்ணயம் கெலாட்டின் வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிட்டு, அவரை அவரது பதவியில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு பாஜக கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.