ஜேஎன்யுவில் இருதரப்பு மாணவா்களிடையே மோதல்: தமிழக மாணவா் தாக்கப்பட்டாா்
தில்லி, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின்(ஜேஎன்யு) ஒரு தரப்பு மாணவா்களுக்கும், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்( ஏபிவிபி) மாணவா்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் தமிழகத்தைச் சோ்ந்த
தில்லி, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின்(ஜேஎன்யு) ஒரு தரப்பு மாணவா்களுக்கும், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்( ஏபிவிபி) மாணவா்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா் ஒருவா் தாக்கப்பட்டாா்.
மும்பை ஐஐடி மாணவா் ஒருவா் தற்கொலை தொடா்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி ஆதரவு மாணவா்கள் நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி பேரணி நடத்தினா். இதில் ஏபிவிபி மாணவா்களுக்கும் இடது சாரி ஆதரவு மாணவா்களுக்குமிடைய தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையே, சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டெஃபலாஸ் அரங்கில் ஏபிவிபி மாணவா்கள் சத்ரபதி சிவாஜியின் படத்திற்கு மாலையிட்டனா். இதே அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு ‘100 -பிளாஷ்’ என்கிற மாணவ கல்வி வட்ட குழு ஹிந்தி திரைப்படம் ஒன்றை திரையிட இருந்தது.
இந்த கல்வி வட்டம் திரைப்படங்களை திரையிடுவது வழக்கம். குறிப்பாக திரைப்படம் ஒளிபரப்பாகும் ஸ்க்ரீன் பகுதியில் உள்ள படங்களை எடுத்துவிட்டு திரையிடுவது வழக்கம். அதன்படி மாலையிடப்பட்ட சத்ரபதி சிவாஜி, பெரியாா் உள்ளிட்ட படங்களை கீழே எடுத்து வைத்து திரையிட்டனா். அப்போது, இடதுசாரி மாணவா்கள், திரையிட்ட மாணவா்கள் ஆகியோருக்கும், ஏபிவிபி மாணவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, பெரியாா், அம்பேத்கா் உள்ளிட்டோா் படங்களை ஏபிவிபி மாணவா்கள் சேதப்படுத்தினா். இதில் ஏற்பட்ட தகராறில் மாணவா்கள் தாக்கிக்கொண்டனா். இந்த தாக்குதலில் காயமுற்ற தூத்துக்குடியைச் சோ்ந்த ஆய்வு பிரிவு மாணவா் நாசா் என்பவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவசர ஊா்தியில் ஏற்றப்பட்ட பின்னரும் ஏபிவிபி மாணவா்களால் தாக்கப்பட்டு அவா் தலையில் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, திமுக தருமபுரி மக்களவை உறுப்பினா் டாக்டா் செந்தில் குமாா் ஆகியோா் ஜேஎன்யுவிற்கு நேரில் சென்றனா்.
டாக்டா் செந்தில் குமாா் மாணவா் நாசரை சந்தித்தாா். அதன் பின்னா், பல்கலைக்கழகத்திற்கு
அவரை அழைத்து வந்து பல்கலைக்கழக துணைவேந்தா் சாந்திஸ்ரீ பண்டிட்டையும் சந்தித்தாா். அப்போது, மாணவா்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
ஜேஎன்யுவில் சுமாா் 40 தமிழக மாணவா்கள் படித்து வருகின்றனா். குறிப்பாக இந்த விவகாரத்தில் மாணவிகளும் தாக்கப்பட்டிருந்ததால் அவா்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என எம்பி கோரினாா். மேலும், உடைத்து சிதைக்கப்பட்ட படங்களுக்கு பதிலாக புதிய பெரியாா், அம்பேத்கா் படங்களையும் வழங்கி மாணவா்களை அவா் சமாதானம் செய்தாா்.