முகப்பு
புதுதில்லி

அதிமுக பொதுக் குழு விவகாரம்: இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் புதன்கிழமை இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
 இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த அதிமுக தலைமைக் கழகம் தரப்பில் வழக்குரைஞர் வினோத் கண்ணாவுடன் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், பொதுக் குழு மற்றும் அவைத் தலைவர் உசேன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, செயற்குழு தரப்பில் மூத்த வழக்குரைஞர் அதுல் சித்தலே மற்றும் வழக்குரைஞர்கள் பாலாஜி ஸ்ரீநிவாசன், கௌதம் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
 இபிஎஸ் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் முன்வைத்த வாதம்: ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டம் கட்சியின் விதிகளுக்கு உள்பட்டு நடத்தப்பட்டது. அதற்கான அதிகாரம் பொதுக் குழுவுக்கு இருந்தது. அந்தக் கூட்டத்துக்கு 15 நாள்கள் முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல. ஏனெனில், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் இந்தக் கூட்டம் குறித்து கட்சி விதிகளின்படி முறையாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டம் நடத்தப்படுவதை மனுதாரர்கள் அறிந்திருந்ததை, அவர்கள் ஜூலை 4-ஆம் தேதி தாக்கல் செய்த சிவில் வழக்கில் தெரிவித்துள்ளனர்.
 நோட்டீஸ் என்பதே தகவல் தெரிவிப்பதுதான். அது தொடர்பான விவரம் உச்சநீதிமன்றத்தின் ஒரு வழக்கின் உத்தரவில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் ஜூன் 23-ஆம் தேதி கூட்டத்திலேயே ஜூலை 11-ஆம் தேதி கூட்டம் குறித்த அறிவிப்பு செய்யப்பட்டது. பொதுக் குழுவை நடத்துவதற்கு 15 நாள்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கட்சியின் விதியிலும் கூறப்படவில்லை. இருப்பினும், முறைப்படி ஜூன் 23-ஆம் தேதி கூட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது என்று வாதிட்டார்.
 மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை தனது வாதத்தின் போது முன்வைத்தார். "ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டால் தாம் தனியாக பொதுச் செயலர் ஆகிவிடலாம் என இபிஎஸ் நினைத்ததாக ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் சரியல்ல. ஏனெனில், ஜூலை 11-ஆம் தேதி காலையில் கட்சி அலுவலகத்துக்கு சென்று சேதப்படுத்தி ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்றனர். இதையடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினருக்கு பிரச்னை எழுந்ததாகக் கூறி கட்சியின் தலைமையகத்துக்கு சீலிடப்பட்டது.
 கட்சி அலுவலக பிரச்னையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்பிறகு உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்து இபிஎஸ் தரப்பிடம் சாவியை அளிக்க உத்தரவிட்டது. கட்சியின் அலுவலகத்தை ஓபிஎஸ் தரப்பினர் சேதப்படுத்தியதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 இதனால், அவரது செயல்பாடுகள் காரணமாகவே ஜூலை 11-ஆம் தேதி காலையில் அவரை நீக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும், அவரை நீக்கியது தவறு எனக் கூறி அந்தத் தீர்மானத்தை அவர் எதிர்த்து முறையிடவும் இல்லை. அவர் முறையீடு செய்தால் அந்த வழக்கில்தான் அதைப் பார்க்க வேண்டுமே தவிர, தற்போதைய வழக்கில் இல்லை என்று அவர் வாதிட்டார்.
 செயற்குழு தரப்பில் மூத்த வழக்குரைஞர் அதுல் சித்தலே வாதிடுகையில், "கட்சியின் விதியை மீறி பொதுக் குழு கூட்டம் கூட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு கட்சி விதிகளுக்கு முரணாக அமைந்திருந்த நிலையில், இரு நபர் நீதிபதி அமர்வு அதை உரிய வகையில் விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், இருவரும் பிரிந்துள்ள நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்தால்தான் பொதுக் குழுவைக் கூட்ட முடியும் என்று தனி நீதிபதி தீர்ப்பு அளித்ததும் கட்சியின் சுமுக செயல்பாட்டுக்கு எவ்வித தீர்வையும் அளிக்கவில்லை' என்றார்.
 இதைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆட்சேபித்து ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ணகுமார், வைரமுத்து தரப்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித்குமார் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். அதில், தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பொதுக்குழு ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை. எவ்வித அடிப்படைக் காரணமும் இல்லாமல் இந்தப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.
 மேலும், டிசம்பர் 1, 2021-இல் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதிகள் திருத்தம் அதிமுகவினரால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முரண்படும் வகையில் இபிஎஸ் தரப்பு செயல்பட்டுள்ளது. உள்கட்சிப் பதவிகளுக்கான தேர்தலையும் இருவரும் சேர்ந்துதான் அறிவித்திருந்தனர். இந்த விஷயங்களை எல்லாம் இரு நபர் நீதிபதி அமர்வு உரிய வகையில் கவனிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
 இதையடுத்து, இரு தரப்பினரையும் வரும் 16-ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →